BREAKING NEWS

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 1 லட்சத்து 28 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு- கரையோர மக்கள் வெளியேற்றம்.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 1 லட்சத்து 28 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு- கரையோர மக்கள் வெளியேற்றம்.

மேட்டூர்: கர்நாடக மற்றும் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பு உள்ளன. அணைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த 8-ந்தேதி முதல் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

 

 

இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது. நேற்று முன்தினம் இரவு 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.67 அடியாக உயர்ந்தது. நேற்று அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 349 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இதனால் அணையின் முழுகொள்ளளவான 120 அடியை 42-வது ஆண்டாக எட்டியது. அணை நிரம்பினாலும் அணையில் இருந்து அப்படியே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

 

 

அதன்படி நேற்று மாலையில் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 1 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. மேலும் அணையையொட்டி உள்ள நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு 1 லட்சத்து 24 ஆயிரத்து 113 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் கன அடி தண்ணீரும், நீர்மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்மட்டம் தொடர்ந்து 120.30 அடி நீடிக்கிறது.

அணையில் இருந்து மொத்தம் 1 லட்சத்து 28 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுப்பணித்துறை சார்பில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் சேலம், நாமக்கல், ஈரோடு காவிரி கரையையொட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும், யாரும் செல்பி எடுக்க ஆற்றில் இறங்காதீர்கள் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )