விளையாட்டு செய்திகள்
பிரபல தடகள வீராங்கனையிடம் பாலின சான்றிதழ் கேட்ட காவலர் மீது புகார்.
பிரபல தடகள வீராங்கனை சாந்தி சௌந்தரராஜனிடம் பாலின சான்றிதழ் கேட்ட காவல் துறை அலுவலர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தி சௌந்தரராஜன். இவர் தேசிய அளவில் 11 பதக்கங்களை இந்தியாவிற்காக பெற்றுள்ளார். மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாகிகளால் சாந்தி சௌந்தரராஜன் சாதி மற்றும் பாலின பாகுபாடு அடிப்படையில் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டார்.
உதவி ஆணையரின் கேள்வி
இதுதொடர்பாக தேசிய பட்டியல் சாதி ஆணையத்தின் உதவியுடன் வேப்பேரி காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் சாந்தி சௌந்தர்ராஜன் புகார் அளித்தார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு, சாந்தி சௌந்தரராஜன் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது வேப்பேரி காவல் உதவி ஆணையர் ஹரிகுமார், பெண் என்பதற்கான சான்றிதழ் நீங்கள் வழங்க வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. கூறியுள்ளார்.
யாருக்கும் உரிமையில்லை
இதனை கண்டிக்கும் வகையில் தேசிய திருநங்கைகளுக்கான தென் மண்டல கவுன்சில் (NCTB) பிரதிநிதியான மதுரையைச் சேர்ந்த கோபி சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டத்தைக் காக்கும் காவல் துறையே சட்டத்தை மீறி நடப்பது வெட்கக்கேடானது. உச்சநீதிமன்றம் ஒவ்வொரு நபரும் தங்கள் பாலினத்தை சுயமாக அடையாளம் காண உரிமையுண்டு எனவும், பாலின அடையாளத்தை வெளிப்படையாக கேள்வி கேட்க காவல் துறை அல்லது நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
வேப்பேரி காவல் உதவி ஆணையர் ஹரிகுமாரின் கேள்வி குறித்து காவல் துறை உயர் அலுவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.