BREAKING NEWS

விளையாட்டு செய்திகள்

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதி போட்டிக்கு முன்னேறுமா இந்தியா


ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் அரைஇறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

16 அணிகள் பங்கேற்றுள்ள 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. 

இதில் ஆன்டிகுவாவில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான இந்திய அணி, 3 தடவை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இந்திய அணி தனது லீக் ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டா அணிகளை அடுத்தடுத்து பந்தாடி கால்இறுதிக்குள் நுழைந்தது. அயர்லாந்து, உகாண்டா அணிகளுக்கு எதிரான லீக் ஆட்டங்களில் கொரோனா பாதிப்பு காரணமாக கேப்டன் யாஷ் துல், துணை கேப்டன் ரஷீத் உள்பட 5 வீரர்கள் களம் இறங்க முடியாத நிலையிலும் இந்திய அணி மலைக்க வைக்கும் ரன்கள் குவித்து எளிதில் வெற்றியை ருசித்து வியக்க வைத்தது. கால்இறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் வங்காளதேசத்தை வதம் செய்து இந்தியா அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

இந்திய அணியின் பேட்டிங்கில் அங்க்ரிஸ் ரகுவன்ஷி (272 ரன்கள்) ராஜ் பாவா (217 ரன்கள்), ஹர்னூர் சிங், கேப்டன் யாஷ் துல், ரஷீத் ஆகியோர் வலுசேர்க்கின்றனர். பந்து வீச்சில் ரவிகுமார், ஹேங்கர்கேகர், விக்கி ஆஸ்ட்வால், கவ்ஷல் தாம்பே சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இதற்கிடையே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பொறுப்பு கேப்டன் நிஷாந்த் சிந்து முழு உடல் தகுதியை எட்டியிருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும். 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி லீக் ஆட்டங்களில் 2 வெற்றியும் (வெஸ்ட்இண்டீஸ், ஸ்காட்லாந்துக்கு எதிராக), ஒரு தோல்வியும் (இலங்கையிடம்) கண்டு கால்இறுதியை எட்டியது.

கால்இறுதியில் 119 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பதம் பார்த்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. கூப்பர் கன்னோலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டீக் வில்லி (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 264 ரன்கள்), கேம்ப்பெல் கெல்லாவே (158 ரன்கள்) பேட்டிங்கில் அசத்துகிறார்கள். பந்து வீச்சில் டாம் ஒயிட்னி, வில்லியம் சல்மான் (7 விக்கெட்) மிரட்டுகிறார்கள்.

பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால் இந்திய அணி கூடுதல் நம்பிக்கையுடன் இந்த ஆட்டத்தில் களம் இறங்கும். அதேநேரத்தில் வலுவான ஆஸ்திரேலிய அணியும் வெற்றிக்காக வரிந்து கட்டும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )