அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே மனித நேய மக்கள் கட்சி வாழ்த்து.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா எம். எல்.ஏ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்திகள் கூறியிருப்பதாவது;-
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து ஒன்பது முறை வெற்றி பெற்றவர். குல்பர்கா மக்களவைத் தொகுதியில் இரண்டு முறை வென்று இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்வானவர். கர்நாடகாவில் வெவ்வேறு காங்கிரஸ் அரசுகளில் அமைச்சர் பொறுப்பு வகித்தவர்.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் வென்றபின் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், ரயில்வே அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
நாடு பல்வேறு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கும் இந்த வேலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று இருக்கும் மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு கடும் சவால்கள் முன்னணியில் இருந்தாலும் அவற்றையெல்லாம் எளிதாக களம் கண்டு வெற்றி பெறுவார் என்று திடமாக நம்புகிறேன்.
பொருளாதார சீர்குலைவு, வேலையின்மை, சமூக நல்லிணக்க சீர்குலைவு, ஊழல்கள், பாசிச வகுப்புவாத சிக்கல்கள் போன்ற பல்வேறு சிக்கல்களில் திணறிக் கொண்டிருக்கும் இந்திய திருநாட்டை ஜனநாயக வழியில் மீட்டெடுத்து வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் மிகப்பெரிய பணியை தன் தோளில் சுமந்திருக்கும் மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு உற்ற துணையாக நாங்களும் இருப்போம் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் அவருக்கு ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.