அறம் செய்தி எதிரொலி மஞ்சக்கல்பட்டியில் அங்கன்வாடி மையம் புதிய கட்டிடம் திறப்பு விழாஅதிகாரிகள் நடவடிக்கை
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி 10 வது வார்டு மஞ்சக்கல்பட்டியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு 40 மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். அங்கன்வாடி மையம் சிதலமடைந்ததால் ஊரக வளர்ச்சி மற்றும் ஊரகத்துறை சார்பில் 9.08 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதியுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
ஆனால் 3 மாதத்திற்கும் மேலாகியும் மின் இணைப்பு, தண்ணீர் வசதி வழங்காததால் மையம் திறக்கப்படாமல் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதனால் வாடகை கட்டிடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையமானது போதிய இடவசதி இல்லாததால் குழந்தைகள் அமரும் அறையிலேயே சமையலும் செய்கின்றனர்.
மேலும், கழிப்பறை வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே புதிய அங்கன்வாடி மையத்திற்கு மின் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கி மையத்தை திறந்து வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறம் செய்தியில் செய்தியாக வெளியானதின் எதிரொலியாக புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது. தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி மன்றத் தலைவர் சாரதா பழனியப்பன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதில் சங்ககிரி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பரணி, அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.