ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, ஜம்புதுரைகோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் திடீர் முற்றுகை. பரபரப்பு.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.
கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, கிராம பொதுமக்கள் ஜம்புதுரைகோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தை இன்று வெள்ளிக்கிழமை திடீர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ஊரில் ஒரு பிரிவினர் சுமார் 32 சென்ட் பொது இடத்தை ஆக்கிரமிப்புகள் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிலர் பொது இடங்களை ஆக்கிரமிப்பு செய்து, கழிப்பறை, வீடு சுற்றுச்சுவர், திண்ணை, வாசல் படிக்கட்டு, குளியலறை உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜெ.ஊத்துப்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் ஒரு பிரிவினர், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு குறிப்பிட்ட பிரிவினர் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லி, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக புகார் மனு கொடுத்து உள்ளனர்.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் சமுதாயக்கூடம், விளையாட்டு மைதானம், கால்நடை மருத்துவமனை, அரசு ஆரம்ப நிலையம் உள்ளிட்டவை கட்டலாம் என கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளதால், இந்த கிராமத்தில் 12 ஆண்டுகளாக கோயில் திருவிழா நடைபெற உள்ள எனவும் கூறப்படுகிறது.
இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த இடத்தை சர்வே செய்த வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற, நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, கடந்த 19.2.2022 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஆனால், இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து, இன்று வெள்ளிக்கிழமை ஜெ.ஊத்துப்பட்டியை சேர்ந்த பெண்கள் உட்பட 100 பேர், ஜம்புதுரைகோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தை திடீர் முற்றுகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.