ஆசிய கோப்பை கிரிக்கெட்; 11 பவுண்டரி, 76 ரன் விளாசல்: இலங்கையை துவம்சம் செய்த இந்திய வீராங்கனை ஜெமீமா!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வீழ்த்தியது. இந்திய வீராங்கனை ஜெமீமா அதிரடியாக விளையாடி 76 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மலேசியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசிய மகளிர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இன்று நடந்த முதல் போட்டியில் தாய்லாந்து அணியும் வங்கதேச அணியும் மோதியது.
இதில் முதலில் பேட்டிங் செய்த தாய்லாந்து அணி 82 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து களம் இறங்கிய வங்கதேச அணி 11.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 88 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் பின்னர் இந்தியா- இலங்கை அணிகள் மோதிய 2-வது போட்டி நடைபெற்றது. முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக ஷபாலி வர்மா- மந்தனா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி 13 ரன்களில் பிரிந்தது. 6 ரன் எடுத்திருந்த மந்தனா. குமாரி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய ஜெமீமா அபாரமாக விளையாடி இலங்கை பந்து வீச்சாளர்களை நாலாபக்கமும் சிதறடித்தார். அதே நேரத்தில் மற்றொரு தொடக்க வீரர் ஷபாலி வர்மா 10 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இதையடுத்து ஹார் களமிறங்கினார். இவர் ஜெமீமாவுடன் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தார். இந்திய அணியின் ஸ்கோர் 115 ஆக இருந்தபோது ஜெமீமா ஆட்டமிழந்தார். இவர் 53 பந்தில் 76 ரன்கள் குவித்தார்.
இதில் ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகள் அடங்கும். பின்னர் வந்த ஹேமலதா 13 ரன்னிலும், ரிஷாகோஷ் 9 ரன்னிலும், பூஜா ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். ஹார் 33 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் ஒசாடி ரணசிங்கே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குமாரி. அதப்பத்து தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய அதப்பத்து 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ஷிகானி 9 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடக்க வீரர் சமர விக்ரமா 26 ரன்கள் எடுத்தார்.
இதில் 5 பவுண்டரிகள் அடங்கும். பின்னர் வந்த ஹாசினி பெரைரா அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து இலங்கை அணி வீரர்கள் சீட்டு கட்டு போல் விக்கெட்டுகளை இழந்தனர். நிலாக்ஷி டி சில்வா 3 ரன்னிலும், தில்கரி ஒரு ரன்னிலும், சஞ்சீவாணி 5 ரன்னிலும், குமாரி 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.2 ஓவரில் 109 ரன்னுக்கு இலங்கை அணி ஆட்டம் இழந்தது. இந்திய தரப்பில் ஹேமலதா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பூஜா, தீப்தி சர்மா ஆகியோ தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ராதா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இந்திய அணி முதல் போட்டியில் அபார வெற்றி பெற்று இந்திய ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. நாளை மலேசியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் இலங்கையும், ஐக்கிய அரபு எமிரேட் அணியும் விளையாடுகின்றன.