`ஆட்சி பறிபோவதில் கவலையில்லை; அவர்கள் முதுகில் குத்தியதுதான் வலிக்கிறது’- கலங்கும் முதல்வர்!

“முதல்வர் பதவி பறிபோவதும், ஆட்சியைக் காப்பாற்றுவது குறித்தும் எனக்குத் துளியும் கவலை இல்லை. சொந்த கட்சியினரே முதுகில் குத்தியது தான் மிகவும் வலிக்கிறது” என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கவலை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனாவுக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களே போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தற்போது அசாம் மாநிலம் குவாஹாட்டியில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 10 சிவசேனா எம்எல்ஏக்கள் அமைச்சருக்கு ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து வருகிறார்கள்.
இதனால் சிவசேனா தலைமையிலான ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் சிவசேனா தலைவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். முகாம் மாறும் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை செய்து வருகிறார். தகுதி நீக்கம் நிகழ்வுகள் நடைபெற்றால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்குச் சாதகமான சூழல் ஏற்படும் என்பதால் தொடர்ந்து அதிருப்தி எம்எல்ஏக்களிடம் சிவசேனா தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
கட்சிக்குள் நடக்கும் களேபரங்களால் அதிர்ச்சி அடைந்துள்ளார் உத்தவ் தாக்கரே. இந்நிலையில் நேற்று இரவு வீடியோ ஒற்றை வெளியிட்டுள்ளார் உத்தவ் தாக்கரே. அதில், “ஏக்நாத் ஷிண்டே சிவசேனா எம்எல்ஏக்களை அசாமில் தங்க வைத்துள்ளதன் பின்னணியில் பாஜக இருக்கிறது. சிவசேனா எம்எல்ஏக்கள் அவர்களால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். சிவசேனாவை அழிக்கும் முயற்சியை பாஜக தொடங்கியுள்ளது. ஏக்நாத் ஷிண்டே பாஜகவின் கருவியாகச் செயல்பட்டு வருகிறார். அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்வது சிவசேனாவிற்கு எளிதானது. முதல்வர் பதவியைத் தக்க வைப்பது குறித்தோ, ஆட்சியைக் காப்பாற்றுவது குறித்தோ எனக்குத் துளியும் கவலை இல்லை. சொந்த கட்சியினரே என் முதுகில் விட்டார்களே என நினைக்கும் போது வலிக்கிறது” என வேதனை தெரிவித்துள்ளார்.
