ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்து குப்பையில் எரித்த பயங்கரம்!!

சென்னை பூந்தமல்லி அருகே குப்பை மேட்டு பகுதியில் தலையில்லாத எரிந்த நிலையில் ஒரு ஆண்சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் தற்போது துப்பு துலங்கியுள்ளது. பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கத்தில் இருந்து கண்ணபாளையம் செல்லும் சாலையில் குப்பைக்கிடங்கில் அவ்வப்போது குப்பைகளை எரிப்பது வழக்கம்.இந்நிலையில் கடந்த 25ம் தேதி குப்பைக்கிடங்கின் சாலை ஓரம் எரிந்த நிலையில், தலை, கைகள் வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனால் குப்பை கிடங்கு பகுதிக்கு ஆவடி, திருவேற்காடு மற்றும் பூந்தமல்லி ஆகிய 3 காவல்நிலைய போலீசாரும் ஒன்று சேர்ந்து வந்தனர். இதனால் சம்பவம் நடந்த பகுதி எந்த எல்லைக்குள் வருகிறது? இந்த வழக்கை யார் விசாரிப்பது? என்பது குறித்த சந்தேகங்கள் எழுந்தன. இந்த பேச்சுவார்த்தையில் சம்பவ இடம் ஆவடி எல்லைக்குள் வரவில்லை என்ற காரணத்தால் ஆவடி போலீசார் கிளம்பி சென்றனர்.
இதற்கடுத்தபடியாக பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய 2 காவல்நிலைய போலீசாரிடையே எல்லை பிரச்சினை குறித்து வாக்குவாதம் தொடர்ந்தது. பின்னர் வேறு வழியின்றி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலை மற்றும் கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தது யார்? வேறு எங்காவது கொலை செய்துவிட்டு அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் போலீசாரை குழப்பும் நோக்கத்துடன் இவ்வாறு சடலத்தை வீசித்துவிட்டு சென்றனரா? அல்லது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் திருவேற்காடு போலீசார் நடத்திய விசாரணையில் கொல்லப்பட்டது மாங்காடு சாதிக் நகரைச் சேர்ந்த சிராஜூதின் என்பது தெரிய வந்தது. ஆட்டோ டிரைவரான இவரை கொலை செய்தது யார் என்பது குறித்து கண்டறிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

ஆட்டோ ஓட்டுநர் சிராஜூதின் தனது காதலியான ஜூனத்திடம் துணை நடிகை கொலை சம்பந்தமாக அதிக பணத்தை வாங்கி உள்ளார். இதற்கிடையில் ஜூனத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரிடம் பணத்தை சிராஜூதின் திரும்ப கேட்டுள்ளார். ஆனால் இதை ஜூனத் மறுத்து பணம் தராமல் இருந்துள்ளார். மேலும் அடிக்கடி தனக்கு சிராஜூதின் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஜூனத் குற்றம்சாட்டினார்.
இதனால் வெறுத்து போன ஜூனத், சிராஜூதினை விட்டுவிட்டு மகேஷ் என்ற வேறு நபருடன் காதல் ஏற்பட்டது. ஜூனத் வீட்டிற்கு மகேஷ் வந்திருந்த போது சிராஜூதீன் வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த தகராறு கைகலப்பாகி மகேஷ் அடித்ததில் சிராஜூதின் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார்.
இதனால் பயந்து போன மகேஷ் மற்றும் ஜூனத், போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக சிராஜூதின் தலையை வெட்டி வீசிவிட்டு குப்பை மேட்டில் போட்டு எரித்துள்ளனர்.
விசாரணை முடிவில் ஜூனத்தும், அவரது காதலன் மகேசும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சம்பவம் நடந்த 10 நாட்களில் போலீசார் சாதுர்யமாக செயல்பட்டு கொலையாளிகளை கைது செய்ததால் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
