ஆண்டிப்பட்டியில் போக்குவரத்து இடையூராக வீடு கட்டுவதை தடுக்க வலியுறுத்தி தி.மு.க கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் உள்ள காமராஜர்நகர் 3வது தெரு பகுதியில் தனிநபர் ஒருவர் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீடு கட்டுவதாக கூறி,
அந்த பகுதியின் பேரூராட்சி கவுன்சிலர் சுரேஷ்பாண்டி தலைமையில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தேனி-மதுரை சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைக்கண்ட போலீசார் உடனடியாக அங்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கை குறித்து புகார் மனு கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும் இதுகுறித்து போலீசாரிடம் புகார் மனுவும் கொடுத்தனர். இந்த மறியல் போராட்டத்தால் தேனி-மதுரை சாலையில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தனிநபர் வீடு கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தி.மு.க கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.