இந்து இலக்கியம் என்று எதுவும் இல்லை வெற்றிமாறனுக்கு ஜோதிமணி ஆதரவு.

ராஜராஜ சோழன் இந்துவாக முயற்சிக்காதீர்கள் என்ற இயக்குநர் வெற்றிமாறனின் கருத்துக்கு ஆதரவாக அரசியல் உலகில் இருந்து ஜோதிமணியின் குரல் உயர்ந்திருக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் பேசிய திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது போன்ற செயல்களை ஏற்க இயலாது என்று பேசினார்.
அவரின் பேச்சை அனைவரும் கண்டிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் எதிர்வினை ஆற்றியிருந்தார். இந்த நிலையில் இது குறித்த வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்த வரிசையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, வெற்றிமாறனின் கருத்துக்கு ஆதரவான கருத்தை தெரிவித்திருக்கிறார். “ராஜராஜ சோழன் ஒரு தமிழ் பேரரசன்.
நம்பிக்கையில் சைவர். தமிழில் சங்க, சைவ, வைணவ இலக்கியங்கள் உண்டு. இந்து இலக்கியம் என்று எதுவும் இல்லை. பாஜகவிற்கு தமிழக வரலாற்றைப் பற்றி எவ்வித அறிவும், அக்கறையும் இல்லை.
மதவெறி மட்டுமே பிரதானம். சினிமா உட்பட எந்தக் கலைவடிவமும் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாது. இயக்குநர் வெற்றிமாறன் கருத்து சரியானதே” என்று ஜோதிமணி தெரிவித்திருக்கிறார்.