இந்து மத தெய்வங்களை வழிபட இந்துக்கள் அனைவரும் கட்டுப்பாடுகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என சூரியனார்கோவில் ஆதீன 28 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பில் ஆன்மிக கருத்தரங்கம் மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் சூரியனார்கோவில் ஆதீன 28 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசியதாவது மற்ற உயிரினங்களை காட்டிலும் மானுட பிறவியானது தனித்துவம் பெற்றது. இந்த பிறவியை நாம் பயனுள்ளதாக மாற்ற வேண்டும்.
மன்னர்கள் காலத்தில் மனிதர்களிடையே தீவிரவாதம் வளர்ந்துவிடக்கூடாது என்பதற்காக தான் கோயில்களை கட்டி, அங்கு தெய்வங்களின் சிலைகளை வைத்து வழிபடும் முறை அதிகமானது. இதற்காக மன்னர்கள் பல மானியங்களை வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரம் கோயில்களும், சிறிய, கிராம கோயில்கள் என 6 லட்சம் கோயில்களும் உள்ளன.
கோயில்களில் பணியாற்றும் குருக்களுக்கு உரிய ஊதியம் கிடையாது. அவர்களுக்கு பக்தர்கள் வழங்கும் காணிக்கை தான் அன்றாடம் கைச்செலவுக்கு பயன்படுகிறது. கோயில்களின் நிலங்களை, இடங்களை பயன்படுத்துவோர் தமிழகத்தில் அதிகம் உள்ளனர். அவர்கள் முறையாக குத்தகையை வழங்கினால் தான் கோயில்களின் பூஜைகளும் சிறப்பாக நடக்கும் என்றார்.
கூட்டத்தில் கிராம கோயில்கள் அனைத்தையும் அந்தந்த கிராம நிர்வாகத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். 12 ஆண்டுகளுக்கும் மேலாக குடமுழுக்கு நடைபெறாத கோயில்களில் குடமுழுக்கு நடத்த வேண்டும். இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட அனைத்து கோயில்களிலும் அன்னதானம் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.