இன்று முதல் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்!

இன்று முதல் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்! எப்படி விண்ணப்பிப்பது? இன்று முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், தங்களது மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. 2021 -22 ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் மே மாதத்தில் நடத்தி முடிக்கப்பட்டன. இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 1முதல் தொடங்கப்பட்டன. ஜூன்17ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 20ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதன்படி நேற்று 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுதேர்வு முடிவுகளை அண்ணா நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதில் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்களைவிட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும்.

இதே போல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 90.1 ஆகும்.
இந்நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வரும் 24-ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளி அல்லது www.dge.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாக சான்றிதழ்களை பெற்றக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுகூட்டலுக்கு விருப்பம் உள்ள 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. முன்னதாக 12-ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 27-ம் தேதி தொடங்கும் என்றும் 10-ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டதுள்ளது.
மாணவர்கள் படித்த பள்ளிகள் மூலமே ஜூன் 24 காலை 11 மணி முதல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.dge.tn.nic.in இணையதளம் மூலமாகவும் பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் 29-ம் தேதி வரை மறுகூட்டலுக்கு பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
