இன்று 124 வது மலர்க்கண்காட்சி முதல்வர் தொடங்கி வைப்பு!!
இன்று 124 வது மலர்க்கண்காட்சி முதல்வர் தொடங்கி வைப்பு!!
மலைகளில் இளவரசி நீலகிரி. இங்கு வருடம் முழுவதுமே ரம்மியமான சூழல் நிலவி மக்களை கவரும். நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவதும் வழக்கமாக இருந்து வருகிறது. அத்துடன் சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் வகையில் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக கண்காட்சி நடத்தப்பட்டு வந்தது. சுற்றுலா பயணிகள் வருகையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சி மே20 இன்று முதல் மே 24 வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார். அங்கு நிறுவப்பட்டுள்ள மலர் மாடங்களை பார்வையிடுகிறார். தாவரவியல் பூங்காவில் முன்னேற்பாடு பணிகள் கடந்த சில நாட்களாகவே தீவிரமாக நடைபெற்று வந்தன.
இந்த ஆண்டு விழாவின் சிறப்பு அம்சமாக 35000 மலர் தொட்டிகளில் ஓரியண்டல் லில்லி, ஏசியாடிக் லில்லி, கேலஞ்சியோடு, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டுனியா, சால்வியா, பெகோனியா, செம்பா, புளோரன்ஸ், ஆஸ்டர், பால்சம், க்ரைசாந்திமம் போன்ற மலர்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. சுமார் 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பூச்செடிகளும் அடங்கும். அத்துடன் ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களால் வேளாண் பல்கலைக்கழக கட்டிடம் முகப்பு தோற்றம் அமைக்கப்படுகிறது.
இதேபோல் ஊட்டி உருவாகி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி ‘ஊட்டி 200’ என்று மலர்களால் எழுதப்பட்டு உள்ளது . பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையிலும் மலர் செடிகள், அரிய வகை தாவரங்கள் உள்ளன. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.