இல்லாத அரசாணை மூலம் ஆசிரியர்கள் ட்ரான்ஸ்பர்: அம்பலமாகிறது கல்வித் துறை முறைகேடு.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் மேலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் இடமாற்றம் மூலம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியதில் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
1970ல் வெளியான அரசாணை ( இப்படி ஒரு அரசாணியே இல்லை என்கிறார்கள் கல்வியாளர்கள். மேலும் 1970-ல் ஆசிரியர்கள் இட மாற்றம் இவ்வளவு சிக்கலாக இல்லை என்பது வேறு விஷயம்) ஒன்றை அடிப்படையாகக் கொண்டு முறைகேடாக டிரான்ஸ்பர்கள் செய்யப்பட்டது.
அதாவது வரலாற்று ஆசிரியர் ஒருவர் அந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியர் பணியிடத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகிறார். சில மாதங்கள் கழித்து ஆசிரியர்கள் இடம் மாற்ற கவுன்சிலிங் போது அறிவியல் ஆசிரியர் ஒருவரும் அந்த பள்ளிக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார்.
ஏற்கனவே அறிவியல் ஆசிரியர் பணியிடத்தில் வரலாற்று ஆசிரியர் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் முறைப்படி மாற்றலாகிவந்த அறிவியல் ஆசிரியருக்கு சம்பளம் வழங்க முடியாமல் போய்விட்டது.
இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான ராஜன் என்பவர் தென்காசி மாவட்ட மற்றும் முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகளுக்கு பலமுறை முறையிட்டும் மாற்றலாகி வந்த வந்த ஆசிரியருக்கு சம்பளம் கிடைக்கவில்லை.
இதனால் தனக்குத்தானே தண்டனை என்ற ரீதியில் அந்த ஆசிரியருக்கு சம்பளம் கிடைக்கும் வரை தானும் சம்பளம் வாங்க போவதில்லை என்று கடந்த சில மாதங்களாக சம்பளம் வாங்காமல் இருந்து வருகிறார் அந்த தலைமையாசிரியர்
இப்போது இல்லாத அரசாணையை அடிப்படையாகக் கொண்டு ட்ரான்ஸ்பரில் குளறுபடி செய்த அதிகாரிகள் பாடு சிக்கலாகிவிட்டது.
இந்த விஷயத்தை எப்படியாவது மூடி மறைக்க தென்காசி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் முயன்றும் முடியாமல் போனது .
இன்று கல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் வரை இந்த விஷயம் கொண்டு செல்லப்பட தென்காசி மாவட்டத்தில் உள்ள கல்வி துறை அதிகாரிகள் சிலர் மீது விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதுதான் கல்வித்துறையில் ஹாட் டாபிக்..