உடுமலை மூணாறு ரோட்டில் யானைகள் உலா -எச்சரிக்கை.

உடுமலை- மூணாறு ரோட்டில், யானைகள் சுற்றி வருவதால், சுற்றுலா பயணியர் எச்சரிக்கையாக கடக்க வேண்டும், என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், அரிய வகை வனச்சூழல் மண்டலமாக உள்ளது.
உடுமலை உட்பட 4 வனச்சரக பகுதியில், யானை, சிறுத்தை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட ஏராளமான வன உயிரினங்கள் வசிக்கின்றன.
உடுமலை, அமராவதி வனச்சரக பகுதிகளில், உடுமலையிலிருந்து – மூணாறு செல்லும் ரோடு அமைந்துள்ளது. பஸ்கள், பொது போக்குவரத்து மற்றும் சுற்றுலா வாகனங்கள் அதிகளவு இந்த ரோட்டை பயன்படுத்தி வருகின்றன. மலைப்பகுதிகளில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், பசுமை திரும்பியுள்ளது.
இதனால், வனத்திற்குள் இருக்கும் யானைகள், காலை மற்றும் மாலை நேரங்களில், உடுமலை- மூணாறு ரோட்டில், சின்னாறு, எஸ். வளைவு, யானைக்காடு உள்ளிட்ட ரோட்டின் பல்வேறு பகுதிகளில், ஆங்காங்கே குட்டிகளுடன் யானைக்கூட்டங்கள்தென்படுகினறன.
இதனால், இந்த வழித்தடத்தில் செல்லும் மக்கள் மகிழ்ச்சியுடன், அவற்றை ரசித்து செல்கின்றனர். ஒரு சிலர், அவற்றை அச்சுறுத்தும் வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் செயல்பட்டு வருகின்றனர்.
வனத்துறையினர் கூறியதாவது: சோதனைச்சாவடிகளில், வாகனங்கள் அனுமதிக்கும் போது, யானைகள், வன விலங்குகளை கண்டால், அவற்றுக்கு தொல்லை கொடுக்காமல், பாதுகாப்பாக துாரத்தில் காத்திருக்க வேண்டும் அல்லது, வனத்துறை சோதனைச்சாவடிக்கு திரும்ப வந்து விட வேண்டும்.
அவை, வனத்திற்குள் சென்றதை உறுதி செய்த பிறகே, கடக்க வேண்டும், என அறிவுறுத்தி வருவதோடு, இந்த ரோட்டில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வன விலங்குகளுக்கு தொந்தரவு கொடுப்பவர்கள் மீது, அபராதம் உட்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். என தெரிவித்தனர். இந்த வீடியோ வாட்ஸப்பில் வைரலாக பரவி வருகிறது.