உண்ணாவிரதப் போராட்டம் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு.

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் தி.விஸ்வநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 1979-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட பணிக்கொடை திட்டம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 31.5.2022 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக வழங்க வேண்டும்.

1.7.2018 முதல் 31.1.2020 வரை காலகட்டத்துகுண்டான ஊதிய உயர்வு நிலுவைத் தொகை 50 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டது. மீதமுள்ள 50 சதவீதத்தை உடன் வழங்க வேண்டும். 1.7.2017 முதல் அரசு ஊழியர்களுக்கு இணையான வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு குறித்து தொழிற்சங்கங்களுடன் கோ-ஆப்டெக்ஸ் நி்ர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

காலிப்பணியிடங்களை நிரப்பும் வரை, பணியாளர் பற்றாக்குறையை கணக்கில் கொண்டு தற்காலிக பணியாளர்களை போதுமான அளவுக்கு நியமிக்க வேண்டும்.விற்பனை குறைவை காரணம் காட்டி, ஊழியர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட சார்ஜ் மெமோவை ரத்து செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கைகளை முன்வைத்து ஆக.7-ம் தேதி தேசிய நெசவாளர் தினத்தன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
