உதகை அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்தில் அரசு வேலை வழங்க ஆட்சியரிடம் மனு
அறையட்டி கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காட்டு யானை தாக்கி உயிரிழந்த லட்சுமணன் என்பவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக கூறி தற்போது வரை வேலை வழங்கப்படவில்லை எனவும் தொடர்ந்து கிராம பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்கள் மற்றும் கோவில்களை சேதப்படுத்தி வருவதாக பாதிப்படைந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்…
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அறையட்டி கிராமத்தில் வசித்து வந்த லட்சுமணன் வயது 55 என்பவரை கடந்த 2021 ஆம் ஆண்டு காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில் உயிரிழந்த லட்சுமணன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக வனத்துறை சார்பாக அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதனை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டதாகவும் ஆனால் மூன்று ஆண்டுகள் ஆகியும் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு தற்போது வரை வேலை வழங்கப்படாததால் பாதிப்படைந்த அவரது உறவினர்கள் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அதேபோல் கிராமப் பகுதியில் மீண்டும் குட்டிகளுடன் காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை சேதப்படுத்தி வருவதால் வனத்துறையினர் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
