எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதில், கட்சி நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில்,பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் நிதியிலிருந்து 2022-2023ஆம் நிதியாண்டில் ரூ.2.45 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும், 2021-2022 ஆம் ஆண்டுக்கான நிதி ஆண்டில் ரூ.58.70 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற பணிகளின் திறப்பு விழாவும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தமிழகம் பாதாளத்திற்கு சென்றதாகவும் தொழில் வளம் முன்னேற்றம் அடையவில்லை எனவும் முதல்வர் முக.ஸ்டாலின் அரசு விழா ஒன்றில் பேசியுள்ளார்.
ஆனால், கடந்த அதிமுக ஆட்சிக்கு இந்தியா டுடே இதழ் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக விருது கொடுத்துள்ளனர். மக்களை பற்றி முதல்வருக்கு கவலைவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஏழை எளிய மக்கள் பயன்பெறும் திட்டங்கள் திமுக அரசு வந்த உடன் கைவிடப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட திட்டங்கள் குறித்தும் திமுகவின் 18 மாத ஆட்சியின் சாதனைகள் குறித்து பொது இடத்தில் தன்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா என எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்தார்.