எரிந்த நிலையில் தலை, கைகள் இல்லாத ஆண் சடலம்!

ரோட்டில் தலை, கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை யார் மீட்டு விசாரிப்பது என்பது குறித்து போலீசாருக்கு எல்லை பிரச்சினை எழுந்ததால் பூந்தமல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கத்தில் இருந்து கண்ணபாளையம் செல்லும் சாலையில் குப்பைக்கிடங்கில் அவ்வப்போது குப்பைகளை எரிப்பது வழக்கம்.
இந்நிலையில் குப்பைக் கிடங்கின் சாலை ஓரம் எரிந்த நிலையில், தலை, கைகள் வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனால் குப்பை கிடங்கு பகுதிக்கு ஆவடி, திருவேற்காடு மற்றும் பூந்தமல்லி ஆகிய 3 காவல்நிலைய போலீசாரும் ஒன்று சேர்ந்து வந்தனர். இதனால் சம்பவம் நடந்த பகுதி எந்த எல்லைக்குள் வருகிறது? இந்த வழக்கை யார் விசாரிப்பது? என்பது குறித்த சந்தேகங்கள் எழுந்தன. இந்த பேச்சுவார்த்தையில் சம்பவ இடம் ஆவடி எல்லைக்குள் வரவில்லை என்ற காரணத்தால் ஆவடி போலீசார் கிளம்பி சென்றனர்.

இதற்கடுத்தபடியாக பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய 2 காவல்நிலைய போலீசாரிடையே எல்லை பிரச்சினை குறித்து வாக்குவாதம் தொடர்ந்தது. பின்னர் வேறு வழியின்றி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலை மற்றும் கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தது யார்? வேறு எங்காவது கொலை செய்துவிட்டு அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் போலீசாரை குழப்பும் நோக்கத்துடன் இவ்வாறு சடலத்தை வீசித்துவிட்டு சென்றனரா? அல்லது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
எரிந்த நிலையில் தலை, கைகள் இல்லாமல் ஆண் பிணம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாலும், குப்பைக் கிடங்கு என்பதாலும் இந்த கொலையை பொது மக்களோ அல்லது துப்புரவு தொழிலாளர்கள் யாரேனும் பார்த்திருப்பார்களோ என்ற சந்தேகமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.