ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நபர் ஆம்பூரில் கைது. 7 கிலோ கஞ்சா பறிமுதல்.
ஒடிசாவில் இருந்து ஈரோட்டுக்கு கஞ்சா கடத்தி வருவதாக மத்திய குற்ற புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு குழுவினர் இணைந்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தற்காலிக பேருந்து நிலையம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நபர் ஒருவர் பையுடன் சுற்றித்திரிந்துள்ளார். அதனை கண்காணித்த குழுவினர் அவரைப் பிடித்து விசாரணை செய்ததில் அவர் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த பிரசாத்மாஜி (வயது 37) என்பதும், அம்மாநிலத்தில் இருந்து ஈரோடுக்கு கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.