ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல் ரத்தக்களறியான அதிமுக தலைமையகம்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டி எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் ஒருவருக்குத் ரத்தகாயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
ஒற்றைத் தலைமை பிரச்சினை குறித்து கடந்த ஐந்து நாட்களாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருதரப்பிலும் தனித்தனியே பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இன்று தீர்மானக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வந்திருந்தார். மேலும் பொன்னையன், வைகைச்செல்வன், ஆர்.வி உதயகுமார், வைத்திலிங்கம், செம்மலை, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ உள்ளிட்ட அதிமுகவின் முக்கியப் பிரமுகர்களும் இதில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தனர்.
அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஒற்றைத் தலைமை குறித்து இருதரப்பினர்களிடையேயும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தலைமையம் முன்பு திரண்டிருந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையொட்டி நடந்த மோதலில் ஒருவருக்கு ரத்தகாயம் ஏற்பட்டது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர் மாரிமுத்து தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரா எனக்கேட்டு தாக்கினார்கள் என்று அவர் புகார் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அதிமுக தலைமையகம் பரபரப்பாக காணப்படுகிறது.