கரூரில் ரேசன் பொருட்களை வாங்கச் சென்ற பெண்ணை அரசுப் பேருந்தில் ஏற்றாமல் அவருடைய 3 வயது குழந்தையை மட்டும் ஏற்றிக்கொண்டு வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் பணியிட மாற்றம்.

கரூரில் ரேசன் பொருட்களை வாங்கச் சென்ற பெண்ணை அரசுப் பேருந்தில் ஏற்றாமல் அவருடைய 3 வயது குழந்தையை மட்டும் ஏற்றிக்கொண்டு வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் பணியிட மாற்றம் – சமூக வலைதளத்தில் வீடியோ வைரலான நிலையில் அதிகாரி நடவடிக்கை.

கரூரை அடுத்த கோடங்கிபடியை சார்ந்த 5 பெண்கள் 3 வயது பெண் குழந்தையுடன் அரசுப் பேருந்தில் ஏறி சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள ஆச்சிமங்களம் கிராமத்தில் செயல்படும் நியாயவிலை கடைக்கு சென்றுள்ளனர். அங்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கி சாக்கில் மூட்டையாக கட்டி வைத்துக் கொண்டு பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக கரூரிலிருந்து ஆலமரத்துப்பட்டிக்கு செல்லும் அரசுப் பேருந்து வந்துள்ளது. அந்த பேருந்தில் 3 பெண்களும், ரேசன் பொருட்கள் அடங்கிய மூட்டையும், 3 வயது சிறுமியையும் ஏற்றி விட்டு, சிறுமியின் அம்மா மற்றொரு மூட்டையை எடுக்கச் சென்றுள்ளார்.

அதற்குள் பேருந்து நடத்துனர் பேருந்தை எடுத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. 3 வயது குழந்தை அம்மாவிடம் செல்ல வேண்டும் என அழுத நிலையில் சுமார் 2 கி.மீ பயணம் செய்த பேருந்து அதற்குள் கோடங்கி பட்டிக்கு வந்து விட்டது. அங்கு சிறுமியையும், ஒரு பெண்ணையும் அரிசி மூட்டையுடன் பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு சென்று விட்டனர். இதனையடுத்து சிறுமியின் அம்மா மற்றொரு பேருந்தில் வந்துள்ளார்.

ஆலமரத்துப்பட்டி சென்று விட்டு திரும்பிய அரசுப் பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஓட்டுநனரும், நடத்துனரும் மன்னிப்பு கேட்டதை அடுத்து பேருந்தை கிராம மக்கள் சிறிது நேரத்தில் விடுவித்தனர். அரசுப் பேருந்தில் இப்பகுதி பெண்களை இலவசமாக பயணிப்பதால் தரக்குறைவாக நடத்துவதாக குற்றம் சாட்டினர்.

இது தொடர்பான வீடியோ கடந்த 2 நாட்களாக சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் அப்பேருந்தை இயக்கி வந்த ஓட்டுநர் பன்னீர்செல்வத்தை காரைக்குடிக்கும், நடத்துனர் மகேந்திரனை தேவகோட்டைக்கும் பணியிட மாற்றம் செய்து கரூர் போக்குவரத்து மண்டல மேலாண்மை இயக்குனர் ராஜமோகன் உத்தரவிட்டுள்ளார்.
