காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், திம்ம சமுத்திரம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சித்தேரிமேடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் இன்று காலை சமத்துவ பொங்கல் விழா துவங்கியது.
இன்னும் ஓரிரு நாளில் தமிழகம் முழுவதும் தை முதல் நாள் தமிழர் திருநாள் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். கார்த்திகை மாதம் விவசாயிகள் நெல் விதைத்து மார்கழி இறுதியில் அறுவடை செய்து தை முதல் நாள் அதன் மூலம் அரிசியை கொண்டு புதுப் பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை குடும்பத்துடன் வழிபடுவது வழக்கம்.
மேலும் தைப்பொங்கல் தினத்தை தமிழ் புத்தாண்டாக கொண்டாட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தும், தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் தோறும் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அனைத்து புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு அப்பகுதி மக்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் சமத்துவ பொங்கல் கொண்டாட அறிவுறுத்தப்பட்டது.
இதில் பாரம்பரிய கலைகள் பள்ளி மாணவர்களின் பல்வேறு திறன் போட்டிகள் மகளிர் சுய உதவி குழுவின் கோல போட்டிகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்டவை இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், திம்ம சமுத்திரம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சித்தேரிமேடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் இன்று காலை சமத்துவ பொங்கல் விழா துவங்கியது.
விழாவிற்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நான் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் , உள்ளாட்சி பிரதிநிதிகளை கட்டைக்கூத்து கலைஞர்கள் மேளதாளம் முழங்க கிராம ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் தலைமையில் கிராமத்தினர் வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து ஆட்சியர் ஆர்த்தி மகளிர் சுய உதவிக் குழுக்கள் கலந்து கொண்ட கோல போட்டிகளை ஆய்வு செய்தார். இதில் மகளிருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோலங்களும் சமத்துவ பொங்கல் கொண்டாட்ட கோலங்களும் இடம்பெற்று இருந்தது.
15க்கும் மேற்பட்ட மகளிர்கள் புது பானையை அலங்கரித்து பச்சரிசி வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் தயாராக வைத்திருந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் பொங்கல் நிகழ்வினை தொடக்கி வைத்தார்.
பொங்கல் பொங்கி வரும் நிலையில் ஆட்சியர் பெண்களுடன் இணைந்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறி பொங்கலோ பொங்கல் என அனைவரும் ஒருங்கிணைந்து முழக்கமிட்டு குலவி சேர் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர்.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சி பாரம்பரிய கலை விழா விளையாட்டுக்காக சிலம்பம் , கட்டைக்கூத்து கலைஞர்களின் கலை நிகழ்ச்சி என ஆடல் பாடலுடன் நிகழ்ச்சி கலை கட்டியது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் தெரிவித்து உறியடி திருவிழாவில் எம்பி உறியடிக்க அனைவரும் ஆரவாரம் தெரிவித்து மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார் , திமுக ஒன்றிய செயலாளர் பி எம் குமார் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பவானி மற்றும் வரதராஜன், திம்மசமுத்திரம் கிராம ஊராட்சி துணைத் தலைவர் சுந்தரம் , ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் செயலர் சரவணன், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.