BREAKING NEWS

கிளியனூரில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அடிக்கல் நாட்டு விழா.

கிளியனூரில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அடிக்கல் நாட்டு விழா.

மயிலாடுதுறை அருகே இந்து,முஸ்லிம் முறைப்படி துவா மற்றும் மந்திரங்கள் ஓதி, ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடம் கட்டும் பணியை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, இந்த சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுப்பிக்க கோரி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது.

 

 

கிளியனூர் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடம் மருத்துவமனை கட்டுவதற்காக இலவசமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கிளியனூர் ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது காலித் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு இந்து, முஸ்லிம் முறைகள் படி, துவா மற்றும் வேத மந்திரங்களுடன் அடிக்கல் நாட்டினார்.

 

தரைத்தளத்தில் 2 மருத்துவர் அறைகள், மருந்து கொடுக்கும் அறை, ஊசி போடும் அறை, ஆய்வகம், கட்டு கட்டும் அறை, காத்திருப்பு அறை, கிடங்கு, கழிவறைகள் கட்டப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கானோர் பயன்பெறும் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொது மருத்துவமனையாக மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகனிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மங்கை உமா மகேஸ்வரி சங்கர், குத்தாலம் ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன், குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் மற்றும் அரசு அலுவலர்கள் மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர்கள், கிளியனூர் கிராம முக்கியஸ்தர்கள், ஜமாத்தார்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )