குடியாத்தம் சைனகுண்டா வனச்சரக சோதனைச் சாவடியில் மாதம்தோறும் லட்சக்கணக்கில் வசூல் வேட்டை நடத்தும் வனவர் சுரேஷ் மீது நடவடிக்கை பாயுமா??

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சைனகுண்டா வனச்சரக சோதனைச் சாவடியில் வனவர் சுரேஷ் லட்சக்கணக்கில் மாமூல் வசூல் செய்து வருகிறார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனச் சரகத்திற்கு உட்பட்ட சைனகுண்டா வனச்சரக சோதனைச் சாவடியில் வனவராக பணிபுரியும் சுரேஷ் என்பவர் தினசரி சோதனைச் சாவடியில் வரும் கால்நடை வாகனங்கள், விறகு லோடு வாகனங்கள், குடியாத்தத்தில் இயங்கி வரும் மர டிப்போக்களில் மற்றும் எல்லையோர ஆந்திரப் பகுதியில் உள்ள கந்தல் சரிவு கல்குவாரியில் மாதந்தோறும் ரூ.20 முதல் 50 ஆயிரம் வரை மாமூல் வருவதாகவும்,
அவையனைத்தும் சுரேஷூக்கு வழங்குவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகாராக கூறி வருகின்றனர்.
நான்கு சக்கர வாகனங்களில் சோதனை செய்யாமல் இருக்க மாமூல் என மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலாக இவருக்கு மாமூல் பணம் வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இவர் தினசரி சோதனைச் சாவடி உள்ளேயே நாள்தோறும் மது அருந்திவிட்டு கறி விருந்துடன் தடபுடலாக கும்மாளம் அடித்து வருவதாக அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் இவரின் மீது புதியதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட வனத்துறை அதிகாரிக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.
புகார் மீது உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆங்காங்கே புகார்கள் கூறிய வண்ணம் பொதுமக்கள் இருந்து வருகின்றனர்.
சுரேஷ் தினசரி சைனகுண்டா சாவடி குடியிருப்பில் இங்கேயே தங்கி இரவு, பகலாக பணி செய்யாமல் வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே வருவதும் போவதுமாக இருந்து வருகிறார்.
இதற்கு காரணம் இவர் யாரும் என்னை கட்டுப்படுத்த முடியாது. யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது என்று கொக்கரிக்கிறார்.
காரணம் என்னிடம் ஒன்றரை கோடி ரூபாய் ஃபைனான்ஸ் பணம் இருப்பதாகவும், வனச்சர அலுவலகத்தில் உள்ளவர்களே தன்னிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருப்பதாகவும் தெனாவெட்டாக கூறுகிறார்.
அத்துடன் எனக்கு மேலேயும், கீழேயும் உள்ளவர்கள் தனக்கு கடனாளிகள் தான் என்றும் போதையில் உளறி வருவதாகவும் தெரியவந்துள்ளது. சோதனைச் சாவடி அருகே உள்ள பொதுமக்கள் தங்கள் பெயரைக் கூற விரும்பாமல் இந்த தகவலை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் வனவர் சுரேஷின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த வாரம் தனகொண்ட பள்ளி அருகே வலசை கிராமத்தில் தாகத்திற்கு தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் தவறுதலாக கிணற்றில் விழுந்துவிட்டது.
அதனை வனவர் சுரேஷூக்கு தொலைபேசி மூலமாக உயிருக்கு போராடும் மானை மீட்டு சிகிச்சை வழங்குமாறு கூறினால் அதை எங்கேயாவது தூக்கி வீசிவிட்டுப் போங்கள் என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி உங்களுக்கு வேற வேலை இல்லையா? என அலட்சியமாக கூறி தகவல் தெரிவித்தவர்களை திட்டியுள்ளார்.
மானை மீட்க நடவடிக்கை எடுக்காமல் இரண்டு நாட்கள் கழித்து குடியாத்தம் வனச்சரகத்தில் இருந்து பிரபு என்ற நபர் மூலம் மான் மீட்கப்பட்டு உயிரற்ற உடலாய் அடக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. இது கடந்த ஒரு வாரமாக பேசு பொருளாக பொதுமக்களிடம் இருந்து வருகிறது.
மேலும் செயலகண்டா, கிரவுண்டபள்ளிகுப்பம், வலசை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளது என தொலைபேசியில் பொதுமக்கள் தகவல் கூறினாலும் யானைகளை விரட்டும் முயற்சியில் நடவடிக்கை எடுப்பதே இல்லை.
யானைகளின் நடமாட்டத்தை தடுக்க பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வருவதும் இல்லை. தகவல் கூறினாலும் யானைகள் தடுப்பு நடவடிக்கையில் வனவர் சுரேஷ் ஈடுபடுவதில்லை என அப்பகுதி பொதுமக்கள் மனம் நொந்து கூறுகின்றனர்.
வனவர் சுரேஷின் இத்தகைய அத்துமீறல் பொதுமக்கள் புகார்களுக்கு அலட்சியமான பதில் கூறிவரும் இவர் பணியில் ஆர்வம் காட்டவில்லை.
இதற்கு மாறாக தினசரி சைனகுண்டா சோதனைச் சாவடி குடியிருப்பிலேயே மது விருந்துடன் ஆட்டம், பாட்டம் போட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் கதைகதையாக கூறுகின்றனர்.
இப்படி சட்ட விரோதச் செயலில் ஈடுபடும் சுரேஷ் என்ற வனவர் மீது மாவட்ட வனத்துறை அலுவலர் துரித நடவடிக்கை மேற்கொண்டு இவரை உடனடியாக இடமாற்றம் செய்து துறை ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்துமாறும், குடியாத்தம் வனச்சரகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி வரும் வனவர் சுரேஷ் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதும் குடியாத்தம் பகுதி தொகுதி பொதுமக்களின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
வனவர் சுரேஷ் மீது வனத்துறை துறை ரீதியான நடவடிக்கையை எடுத்து அவரை சட்டரீதியாக தண்டிக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் ஒட்டுமொத்தமாக போர்க்கொடி தூக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுரேஷ் மீது வனத்துறை எடுக்கும் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
செய்தி ஆசிரியர் சு.வாசுதேவன்