குடியிருப்புகளில் புதிய நபர்கள் நடமாட்டம் தெரிந்தால் போலீஸாருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள்.
![குடியிருப்புகளில் புதிய நபர்கள் நடமாட்டம் தெரிந்தால் போலீஸாருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள். குடியிருப்புகளில் புதிய நபர்கள் நடமாட்டம் தெரிந்தால் போலீஸாருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள்.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/05/WhatsApp-Image-2022-05-29-at-12.01.42-PM.jpeg)
குடியிருப்புகளில் புதிய நபர்கள் நடமாட்டம் தெரிந்தால் போலீஸாருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.
உடுமலை பகுதியில் நடைபெற்று வரும் திருட்டு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போலீசார் பொதுமக்கள் விழிப்புணர்வுக் கூட்டம் சிவசக்தி காலனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.உடுமலை போலீஸ் துணை சூப்பிரெண்டு தேன்மொழிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார்(குடிமங்கலம்),ராஜகண்ணன்(தளி),சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் தற்காப்பு ஆலோசனைகளை வழங்கினர்.
கூட்டத்தில் வழங்கப்பட்ட ஆலோசனைகள் வருமாறு’பொதுவாக கண்காணிப்புக்கேமரா பொருத்தப்பட்டுள்ள வீடுகளில் திருடர்கள் நுழைவதில் தயக்கம் காட்டுகிறார்கள்.எனவே வீடுகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்துங்கள்.மேலும் குடியிருப்போர் நல சங்கங்கள் மூலமாகவோ தன்னார்வலர்கள் மூலமாகவோ குடியிருப்புகளின் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்துவதன் மூலம் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு பிடிக்கமுடியும்.
தற்போது வெளி மாநிலங்களிலிருந்து இங்கு வந்து திருடும் கும்பல் உடனடியாக சொந்த ஊருக்குத் தப்பிச் சென்று விடுகின்றனர்.அத்துடன் கையுறை மற்றும் மாஸ்க் அணிந்து தடயங்கள் கிடைக்காமல் திருடுகின்றனர்.இதனால் குற்றவாளிகளைப் பிடிப்பதிலும்,திருடு போன பொருட்களை மீட்பதிலும் சிரமங்கள் ஏற்படுகிறது.எனவே தங்கள் பகுதிகளில் புதிய நபர்கள் நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.இரவு ரோந்து வரும் போலீசாரின் வாகன ஓசை கேட்டு திருடர்கள் தப்பிவிடக்கூடாது என்பதற்காக குறிப்பிட்ட பகுதிகளில் போலீசார் நடந்து சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான மக்கள் அசந்து தூங்கும் நேரத்திலேயே பெரும்பாலான திருட்டுகள் நடக்கிறது.எனவே இந்த நேரங்களில் அந்தந்த பகுதி இளைஞர்கள் குழுவாக இணைந்து ரோந்து வருவது நல்லது.இரவு நேரங்களில் வீட்டின் முன் மற்றும் பின் புறங்களில் பிரகாசமான விளக்குகளை எரிய விடுங்கள்.கதவு ஜன்னல்களில் பாதுகாப்பு அலாரம் பொருத்துங்கள்.பக்கத்து வீட்டில் நடந்தால் நமக்கென்ன என்று இருக்காதீர்கள்.நாளை நமக்கும் நடக்கலாம் என்பதை உணர்ந்து ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யுங்கள்.வீட்டைப் பூட்டி விட்டு வெளியூர்களுக்கு செல்ல நேர்ந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவியுங்கள்.வீட்டில் விலை உயர்ந்த பொருட்களை வைக்காதீர்கள்.
அவசர உதவிக்கு “காவல் உதவி” ஆப் ஐ மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.பெண்கள் கைப்பையில் பெப்பர் ஸ்ப்ரே வைத்துக் கொள்ளுங்கள்.உதவி தேவைப்பட்டால் உடுமலை போலீஸ் நிலையத்தை 9498101345 என்ற எண்ணிலும் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமாரை 9786134135 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்’என்று போலீசார் ஆலோசனை வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் சிவசக்தி காலனி,அய்யலு மீனாட்சி நகர்,செல்வபுரம் நகர் உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.