கும்பகோணம் பகுதி முழுவதும் டாலரை 40 ரூபாய்க்கு கொண்டு வருவாங்க என்ற காவி நிறத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு.
தஞ்சாவூர் மாவட்டம்,
கும்பகோணம் முழுவதும் காவி நிறத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சுவரொட்டியில் தமிழ்நாடு, காங்கிரஸ் ஆல் இந்தியா புரபோஷனல் என்ற வட்ட வளவிலான சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
அதில், காவி நிறத்தில், சாமியார் உருவம் இருப்பது போல் அச்சிட்டு, அவரது பின்புறத்தில் கதிர்கள் வீசுவது போல் உள்ளது. மேலும், ”காணவில்லை… டாலரை 40 ரூபாய்க்கு கொண்டு வருவாங்க என்று சொன்ன நபரைத் தேடுகிறோம்” என அச்சிட்டுள்ளனர்.
இது குறித்துக் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:- “பிரதமர் மோடி, கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்துவேன் என வாக்குறுதி அளித்தார்.
அதனைச் சுட்டிக்காட்டும் வகையில், இந்தச் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களை கவருவதற்காகவும், மோடியை பற்றித் தெரிந்துகொள்வதற்காக ஒட்டப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூறும்போது, “இதுதொடர்பாக எங்களுக்கு ஒன்றும் தெரியாது. யார் இந்த சுவரொட்டியை ஒட்டியது என போலீஸார்தான் கண்டுபிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.