`கூட்டத்தை கூட்டுவதற்கு ஈபிஎஸ்-க்கு அதிகாரமேயில்லை’- தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் அழுத்தமான கடிதம்.

“தலைமை நிலைய செயலாளரின் பெயரால் கட்சியின் தலைமை நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதற்கு கட்சியின் சட்ட விதிகளின்படி எந்த அதிகாரமும் இல்லை. அது சட்டவிரோதமானது” என்று தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்-க்கும் ஈபிஎஸ்-க்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு ஈபிஎஸ்-க்கே உள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ்சை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கி ஈபிஎஸ் தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. அதோடு அடுத்த பொதுக்குழு கூட்டத்தை ஜூலை 11-ம் தேதி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர் .
இந்நிலையில், பொதுக்குழு நடக்காது என்று உறுதியாக கூறி வரும் ஓபிஎஸ் தரப்பினர், அதற்கான சட்ட நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளதாக தெரிகிறது. நேற்று ஈபிஎஸ் தரப்பில் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஜூலை 11-ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டம் குறித்த ஆலோசனைகள் நடைபெற்றன. அந்த கூட்டத்திற்கு ஓபிஎஸ் தரப்பிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனை அனைத்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “12.09.2017 அன்று அதிமுக சட்ட விதிகள் திருத்தப்பட்டு, அதன் மூலம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் துணை விதி 20-A-ன் படி உருவாக்கப்பட்டன. விதி 20-A (2) இன் படி, மேற்கண்ட இரண்டு பதவிகளும் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. விதி 20-A (3) இன் படி, மேற்படி பதவிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
இந்தத் திருத்தங்கள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 29-A (9) இன் படி, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. அப்போதிருந்து, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் துணைச் சட்டங்களின்படி தங்கள் பணிகளைச் செய்துள்ளனர். அதன் பின் அதிமுக, இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட பல தேர்தல்களை சந்தித்துள்ளது.