கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றுகட்ட தொடர் போராட்டம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் மயில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பேட்டி.

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். தென்காசி மாவட்டச் செயலாளர் மாரிமுத்து வரவேற்று பேசினார். வேலை அறிக்கையை மாநில பொதுச் செயலாளர் மயில் சமர்ப்பித்தார். வரவு, செலவு அறிக்கையை பொருளாளர் மத்தேயு சமர்ப்பித்தார். பொதுக்குழு கூட்ட முடிவுகள் குறித்து மாநில பொதுச் செயலாளர் மயில் கூறியதாவது:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். 1,1,2022 முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை நிறுத்தி வைத்திருப்பதை திரும்பப் பெற வேண்டும். ஆசிரியர்கள் உயர் கல்விக்கு பெற்று வந்த ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்காக பணி பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மூன்றுகட்ட தொடர் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி, வருகிற 21-ம் தேதி மாநிலம் முழுவதும் வட்டார தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆகஸ்ட் 13-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடைபெறும். முதல்பருவ விடுமுறையில் சென்னையில் மாநில அளவிலான போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுவதுபோல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் தனி இடஒதுக்கீடு, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க வலியுறுத்தி மாநில அளவிலான அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான பாதுகாப்பு கருத்தரங்கத்தை சென்னை அல்லது திருச்சியில் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர் ஜான் கிறிஸ்துராஜ், துணை பொதுச் செயலாளர் கணேசன், துணைத் தலைவர்கள் அலோசியஸ் துரைராஜ், ஆரோக்கியராஜ், மாநிலச் செயலாளர் முருகன், தென்காசி மாவட்டத் தலைவர் ரமேஷ், மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் மணிமேகலை, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.