BREAKING NEWS

கோவில்பட்டியில் தீப்பெட்டி கம்பெனி அதிபரிடம் ரூ.6 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த பிரபல கொள்ளையர்கள் 2 பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் மீட்கப்பட்டது.

கோவில்பட்டியில் தீப்பெட்டி கம்பெனி அதிபரிடம் ரூ.6 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த பிரபல கொள்ளையர்கள் 2 பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் மீட்கப்பட்டது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு சங்கர் நகரை சேர்ந்த சேக் முகமது மகன் சையது முகமது புகாரி (37). இவர் சண்முகா நகரில் தீப்பெட்டி மூலப்பொருள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். கடந்த டிசம்பர் 13ம்தேதி மதியம் எட்டயபுரம் ரோட்டில் உள்ள வங்கியில் ரூ.6 லட்சம் எடுத்துவிட்டு அந்த பணத்தை பைக் பெட்டியில் வைத்திருந்தார்.

 

பின்னர் கோவில்பட்டி மார்க்கெட் ரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு மீண்டும் பைக்கை எடுக்க வந்த போது அதிலிருந்த பெட்டி திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பைக் பெட்டியல் வைத்திருந்த ரூ.6 லட்சத்தை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சையதுமுகமதுபுகாரி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வந்தனர்.

 

 

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் மேற்பார்வையில் கிழக்கு காவல் நிலைய எஸ்ஐக்கள் மாதவராஜ், நாராயணன், காந்தி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், பணம் திருட்டு போன பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் அதேநேரத்தில் அப்பகுதியில் செல்போன் சிக்னல்களையும் சைபர் கிரைம் உதவியுடன் ஆய்வு செய்தனர்.

 

அப்போது சையதுமுகமதுபுகாரி பைக்கில் பணத்தை திருடியது சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தேவதாஸ் மகன் சக்கரைய்யா (29), அதேபகுதி பாஸ்கர் மகன் பிரசாத் (26) என்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படையினர் வில்லிவாக்கம் சென்று சக்கரைய்யா, பிரசாத் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.

 

அப்போது போலீசார் வருவதையறிந்த இருவரும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அவர்களை தனிப்படையினர் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடந்தது. அப்போது அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் கைவரிசை காட்டியிருப்பது தெரிய வந்தது. பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

CATEGORIES
TAGS