கோவில்பட்டியில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு வெளியில் தலை காட்ட முடியவில்லை என குமுறல்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. திமுகவை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமையில் அதிமுக ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி முன்னிலையில் காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியது.
11 20 வரை இரண்டு கவுன்சிலர்கள் மட்டுமே வருகை தந்திருந்ததால் கூட்டம் ஒத்தி வைக்கப்படும் சூழல் ஏற்பட்டது. 1.30 மணி அளவில் சில கவுன்சிலர்கள் வருகை தந்ததையடுத்து கூட்டம் நடைபெற தொடங்கியது. மொத்தம் 19 கவுன்சிலர்களில் 10 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

கூட்டத்தில் 9வது வார்டு திமுக கவுன்சிலர் பூமாரி பேசுகையில்….
நீங்கள் வார்டுக்கு என்ன வேலை செய்தீர்கள் என மக்கள் எங்களை நோக்கி கேள்வி கேட்கிறார்கள். அடுத்ததாக நாங்களும் ஏரியாவுக்குள் போகணும் என்பதை அதிகாரிகள் நினைத்துப் பாருங்கள் என தெரிவித்தார்.
5வது வார்டு திமுக கவுன்சிலர் சுந்தரேஸ்வரி பேசுகையில்….
நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு வெளியில் தலை காட்ட முடியவில்லை என வேதனைப்பட்டார்.

6வது வார்டு திமுக கவுன்சிலர் பாரதி பேசுகையில்….
கோரிக்கைகளை எழுதிக் கொடுத்து எழுதிக் கொடுத்து கையே தேய்ந்து போய்விட்டது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை, பத்து நாட்களுக்கு ஒரு முறை கோரிக்கைகளை எழுதிக் கொடுங்கள் எழுதிக் கொடுங்கள் என எழுதி வாங்கி கொள்கிறீர்கள். இதுவரை எழுதிக் கொடுத்ததெல்லாம் என்ன சார் ஆச்சு????
ஒன்றிய கவுன்சிலராக தேர்ந்தெடுத்து மூன்றரை வருடம் முடிந்து விட்டது வெறும் 15 லட்சத்துக்கு மட்டுமே வேலை நடந்துள்ளது. ஒரு வருஷத்துக்கு 5 லட்ச ரூபாய் வேலையை வைத்து என்ன செய்ய முடியும்.ஐந்து லட்சத்தை வைத்து ஒரு வாறுகால் வேலையை கூட முழுதாக முடிக்க முடியாது என ஆதங்கப்பட்டார்.

மன்ற கூட்டத்தில் வைத்து மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்புதல் வாங்காமல் மினிட் நோட்டில் எழுதிக் கொள்கிறீர்கள். எங்களிடம் வெறுமனே கையெழுத்து வாங்கிக் கொண்டு பின்னர் தீர்மானப் பட்டியலில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டிலான சில திட்ட பணிகளை இணைத்து விடுகிறீர்கள். இது சரியல்ல என திமுக கவுன்சிலர் சுந்தரேஸ்வரி தெரிவித்தார்.
கூட்டத்துக்கு வந்து என்ன செய்ய.. மொத்தத்தில் எல்லாமே வேஸ்ட்..
எங்கள் வார்டுக்கு வேலையே ஒதுக்கீடு செய்யவில்லை அதனால் கூட்டத்துக்கு வந்து என்ன பிரயோஜனம் என கருதி மற்ற கவுன்சிலர்கள் கூட்டத்துக்கு வரவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் பரமேஸ்வரி தெரிவித்தார்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாண்டவர்மங்கலம் கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை இது தொடர்பாக அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என அதிமுக கவுன்சிலர் ரஞ்சித் எச்சரித்தார்.

திமுகவைச் சேர்ந்தவர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக உள்ள சூழலில் கவுன்சிலர்கள் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களே சரமாரியாக குற்றச்சாட்டு எழுப்பிய சம்பவம் தூத்துக்குடி மாவட்ட திமுக கூடாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
