கோவில்பட்டி அருகே செல்போன் டவரை காணோம்; தனியார் நிறுவனம் போலீசில் புகார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவர் காணாமல் போனதாக கூறி, தனியார் நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் திரைப்படம் ஒன்றில், `வெட்டிவெச்சிருந்த கிணத்தை காணோம்’ என்று வடிவேல் போலீசில் பரப்பரப்பான புகார் கொடுப்பதுபோல, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் செல்போன் டவர் காணோம் என்று ஒரு புகார் வந்துள்ளது.
விளாத்திகுளம் அம்பாள் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவருக்கு, காமராஜ் நகர் ரோஸ்லின் மருத்துவமனைக்கு பின்புறம் சொந்தமாக இடம் இருக்கிறது.
இந்த நிலத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் சார்பில் செல்போன் டவர் ஒன்று அமைக்கப்பட்டது. இதற்காக 20 வருடங்கள் ஒப்பந்தம் போடப்பட்டு, ரூ.20 லட்சம் அந்நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் ஆய்வு செய்ய வந்தபோது செல்போன் டவர் அந்த இடத்தில் இல்லை என்பது தெரியவந்தது.
செல்போன் டவர் அமைக்க அடிப்பகுதியில் இருந்த கான்கிரீட் தூண்கள் மட்டுமே காட்சி அளித்துள்ளது.
இதை கண்டு திடுக்கிட்ட அவர்கள் தனியார் நிறுவன மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர் நில உரிமையாளரிடம் கேட்டபோது டவரை கழற்றி விற்றுவிட்டதாக கூறினாராம். இதன் மதிப்பு ரூ.21 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் மேலாளரான சென்னை, புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜன் (51) என்பவர் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் இளவரசு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த செல்போன் டவர் ஏர்செல் நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டது என்பதும், 2018 வரை இயங்கிய ஏர்செல் நெட்வொர்க் அதற்குப் பிறகு தன் சேவைகளை நிறுத்திக் கொண்டதால், டவர் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
