கோவில்பட்டி அருகே வேம்பார் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்ற 2 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை கடலோர காவல்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள வேம்பார் கடற்கரை பகுதியில் கடலோரக் காவல் படை ஆய்வாளர் மாரிமுத்து தேவேந்திரன் தலைமையிலான போலீசார் வேம்பார் கடற்கரை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சரக்கு வாகனம் ஒன்று வேம்பார் கடற்கரை ஓரத்தில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததை கண்ட போலீசார் அந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர்.அதில் 43 பண்டல்களில் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான 1500 கிலோ எடையுள்ள பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
லாரி ஓட்டுனர் தூத்துக்குடி முத்து கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த ஜெயராம் என்பவரை பிடித்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் சட்டவிரோதமாக பீடி இலைகளை இலங்கைக்கு கடத்தி செல்ல இருப்பது தெரிய வந்தது.
போலீசார் 1500 கிலோ பீடி இலைகளை கைப்பற்றி தூத்துக்குடி சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வேம்பார் கடலோர காவல் படை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.