கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பூட்டிக்கிடக்கும் பொதுமக்கள் காத்திருப்பு அறை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டத்தில் விளாத்திகுளம், எட்டயபுரம், கோவில்பட்டி, கயத்தார், ஒட்டப்பிடாரம் என 5 தாலுகா, 6 பேரூராட்சி, 5 வட்டார ஊராட்சி, 225 ஊராட்சி, ஒரு நகராட்சி என மக்கள் தொடர்புடைய அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன மாவட்டத்தில் திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய இரண்டு கோட்டாட்சியர் அலுவலகங்கள் இருந்தாலும் நிர்வாக ரீதியாக கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் மிகப்பெரியதாகும்.
அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து மற்ற வாரநாட்களில் பொதுமக்கள் பொதுப்பிரச்னை, தனிநபர் பிரச்சினை, சொந்த பிரச்சினை, வட்டாட்சியர் அலுவலகங்களின் எல்கைக்கு மீறிய மேல்முறையீடு செய்வதற்கு கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு வருபவர்கள், விவசாயிகள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் முற்றுகையில் ஈடுபடுவோரை காவல்துறையினர் அழைத்து வந்து கோட்டாட்சியர் கோட்ட நடுவர் என்ற அடிப்படையில் ஆஜர்படுத்துவதற்கு அழைத்து வருதல் என தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் வருகின்றனர்.
வரும் மக்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டி இருப்பதால் அவர்களுக்கு கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் பொதுமக்கள் காத்திருப்பு அறை சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் மாவட்ட கலெக்டரின் சிறப்பு நிதி மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் கட்டப்பட்டது. கட்டிய நாளில் இருந்து இதுவரை அக்கட்டிடம் திறக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் காத்திருப்பு அறை கட்டியும் பயனின்றி காட்சிப் பொருளாகவே காணப்படுகிறது.
மேலும் இங்கு வரக்கூடிய பொதுமக்களுக்கு குடிநீர் வசதி இல்லாததால் வெளியில் கடைகளில் குடிநீர் விலைக்கு வாங்கி குடிக்கின்றனர். கழிப்பிட வசதியும் இல்லை. இதனால் அலுவலக வளாகத்தில் திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கோவில்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் பூட்டிக்கிடக்கும் பொதுமக்கள் காத்திருப்பு அறையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்து மக்கள் அமர்வதற்கு வசதியாக பிளாஸ்டிக் நாற்காலிகள் போட வேண்டும். கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது.