கோவையில் பொதுமக்கள் சாலை மறியல்.

கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற்குட்பட்ட கீரணத்தம் கல்லுக்குழி பகுதியில் அரசு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 1200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள கழிவு நீரானது அங்குள்ள ராட்சத தொட்டியில் நிரப்பி பின்னர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து லாரிகள் மூலம் வெளியேற்றப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக இந்தக் கழிவு நீரை சுத்தகரிப்பு பண்ணாமல் தேக்கி வைத்த தொட்டியிலிருந்து கொண்டையம்பாளையம் லட்சுமி கார்டன் செல்லும் பிரதான சாலையில் திறந்துவிடப்படுகிறது.
இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.இதுகுறித்து கீரணத்தம் ஊராட்சியில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இதனை கண்டித்து சாலையின் குறுக்கே கற்களை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 4 நாட்களாக கழிவு நீரை ரோட்டில் திறந்து விடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. நாங்கள் பலமுறை அரசு அதிகாரிகளையும் கீரணத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ராசி என்ற பழனிச்சாமியையும் சந்தித்து புகார் கூறினோம். ஆனாலும் அவர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே இதனை உடனே சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி உரிய நடவடிக்ைக எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.