சங்ககிரியில் சென்னகேசவ பெருமாள் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கோலாகலம்.
சங்ககிரியில் சென்னகேசவ பெருமாள் திருக்கோயில் தேர்த்திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோவில் சித்திரை திருவிழாவானது, கடந்த 15ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. அன்று மாலை சங்ககிரி மலையில் இருந்து சென்னகேசவப் பெருமாள் உடனமர் ஸ்ரீ தேவி , ஸ்ரீ பூதேவி , ஆஞ்சநேயர் உற்சவ மூர்த்தி சுவாமிகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சுவாமி பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருளைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், பூஜைகள் நடைபெற்றன.
தினமும் சுவாமி அன்னப்பட்சி வாகனத்திலும், சிங்க வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், புன்னை மர சேவை , யானை வாகனம், சுவாமிக்கு திருக்கல்யாண வைபமும், குதிரை வாகனத்திலும் சுவாமி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வந்தார். 9ம் நாளான நேற்று காலை , மலையடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் இருந்து ஆஞ்சநேயர் சுவாமி முன்னே செல்ல சென்ன கேசவப் பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி , ஸ்ரீபூதேவி சுவாமிகள்
பெரிய தேருக்கு எழுந்தருளினர். பக்தர்கள் தேரில் எழுந்திருளியுள்ள சுவாமிகளுக்கு தேங்காய், பழம், பூக்கள் தட்டு வைத்து பக்தர்கள் குடும்பத்துடன் வழிப்பட்டனர்
அதன் பிறகு மாலை 5.30 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதி , தலைமையில், மாவட்ட திமுக அவைத்தலைவர் தங்கமுத்து, சங்ககிரி பேரூராட்சி மன்றத் தலைவர் மணிமொழி, பேரூர் திமுக செயலாளர் முருகன், பேரூராட்சி துணை த் தலைவர் அருண்பிரபு உட்பட ஏராளமான கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.