சங்கரன்கோவிலில் குடிபோதையில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து வாலிபர் பலி.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. அதன் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் பிணமாக கிடப்பதாக சங்கரன்கோவில் நகர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சங்கரன்கோவில்டிஎஸ்பி சுதிர் தலைமையிலான காவல்துறையினர் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சங்கரன்கோவில் சேக்கிழார் தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் ரவிச்சந்திரன்(35) என்பதும் அவர் வேலையின்றி இருந்து வந்ததால், மன அழுத்தத்தில் அவ்வப்போது மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு மது அருந்திவிட்டு அப்பகுதியில் வரும் போது கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்ததில் மூக்கில் அடிபட்டு இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சங்கரன்கோவில் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.