சங்கரன்கோவில் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ 3000க்கு விற்பனை. விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்
இப்பகுதி விவசாயிகளால் மல்லிகை பூ பிச்சிப்பூ, முல்லைப்பூ, கனகாம்பரம், செவ்வந்தி, கேந்தி சேவல், சம்பங்கி உட்பட ஏராளமான மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தெப்பக்குள மண்டபத்தில் அமைந்துள்ள தினசரி மொத்த பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர்.
அங்கு ஏலம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பூமார்க்கெட்டில் இருந்து தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிகளவு பூக்கள் கொண்டு செல்லப்பட்டு விற்பனையாகிறது.
தென் தமிழகத்தில் குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மதுரை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் மல்லிகை பூ அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக மல்லிகை பூ ஒரு கிலோ 1500 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. மல்லிகை பூ மழை காலங்களில் அதிக அளவில் விளைச்சல் இருக்காது. மேலும் பனி காலங்களிலும் விளைச்சல் அதிகம் இருக்காது.
அதே நேரத்தில் பிச்சிப்பூ மற்றும் முல்லை பூ அதிக அளவில் விளையும் இந்நிலையில் இன்று சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ மல்லிகைப் பூ 3000 ரூபாய்க்கு விற்பனையானது.
பூ விளைச்சல் குறைவாக உள்ளதாலும் நாளை வளர்பிறை மூகூர்த்த வைபவங்கள் மற்றும் செவ்வாய் அன்று திருக்கார்த்திகை திருவிழா இருப்பதாலும் மல்லிகைப் பூ தேவை அதிகம் உள்ளது இதனால் விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தரப்பில் தகவல் தரப்படுகிறது.
ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ 3000 க்கு விலை போனதால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.