சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்து தராததை கண்டித்து பொதுமக்கள் ஆற்றில் தேசியக்கொடியுடன் போராட்டம்.
மயிலாடுதுறை,
காவிரி ஆற்றின் கிளை ஆறுகளில் ஒன்றான வீரசோழன் ஆறு மயிலாடுதுறை மாவட்டத்தின் வழியே வங்காள விரிகுடா கடலில் கலக்கின்றது. சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன வசதி மற்றும் வடிகால் வசதி அளிக்கும் முக்கிய ஆறாக வீரசோழன் ஆறு விளங்கி வருகின்றது.
இந்நிலையில் தரங்கம்பாடி தாலுக்கா முத்துரங்குடி ஊராட்சி மற்றும் இலுப்பூர் ஊராட்சி
பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பொது இடங்கள் மற்றும் குளம் குட்டை ஆக்கிரமிப்புகள் வீரசோழன் ஆற்றில் கலக்கும் கழிவு நீர் மற்றும் இறைச்சி கோழி மீன் மீன் வியாபாரிகள் விற்பனை செய்து மிச்சம் எஞ்சிய கழிவுகளை வீரசோழன் ஆற்றில் கொட்டி சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகிறது என்றும் அதனை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆற்றில் இறங்கி தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக காவிரி நீர் மாசடைந்து பல்வேறு விதமான நோய்கள் பொது மக்களுக்கு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் சாக்கடைநீராக காவேரி நீர் மாறி வருவதாகவும் இதற்கு உடனடி தீர்வு காண வேண்டுமென ஏற்கனவே அப்பகுதியில் உள்ள கதிரவன் என்ற இளைஞர் வீரசோழன் ஆற்றில் தலைகீழாக நின்றபடியும், செல்போன் டவரின் மீது ஏரி தலைகீழாக நின்றபடியும் இருமுறை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் லலிதா போராட்டத்தில் ஈடுபட்ட நபரை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் வியாழக்கிழமை காலை 8:30 மணிக்கு வீரசோழன் ஆற்றில் பத்துக்கும் மேற்பட்ட உத்திரங்குடி, இலுப்பூர் ஊராட்சி கிராம மக்கள் ஒன்றிணைந்து காவிரி ஆறு மற்றும் வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும், உடனடியாக தூர்வார வலியுறுத்தியும் தேசிய கொடியை ஏந்தியபடி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பலமுறை மனு கொடுத்தும் பயனில்லாத நிலையில் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இரு போராட்டங்கள் நடத்தியும் 7 நாட்களுக்குள் தீர்வு காணப்படுவதாக அப்போது அறிவித்த நிலையில் தற்போது வரை உரிய தீர்வு எடுக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் குற்றம் சாட்டி பேனர்களை வைத்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொறையார் காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்கு ஒத்து வராத பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் என்று கூறினர். இதன் அடிப்படையில் தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் சதீஷ், பொறையார் காவல் ஆய்வாளர் சிங்காரவேலு, உத்திரங்குடி கிராம நிர்வாக அலுவலர், இலுப்பூர் கிராம நிர்வாக அலுவலர், இலுப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, உத்தரங்குடி ஊராட்சி மன்ற தலைவர் லெனின் மேசாக் ஆகியோர் இரு ஊராட்சி கிராம முக்கியஸ்தர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.
அதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட பாஜக பிரச்சார அணி தலைவர் அழகிரிசாமி தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் ஆசிக் ரகுமான், இலுப்பூர் கம்யூனிஸ்டு கிளைச் செயலாளர் பாலமுருகன்,
இலுப்பூர் கிராம பஞ்சாயத்தார்கள் துரை, கல்யாணம், குமார், தமிழ்வாணன், திமுக ஊடகவியலாளர் விக்னேஷ் மற்றும் உத்தரங்குடி, இலுப்பூர் கிராமவாசிகள் பலர் கலந்து கொண்ட பேச்சு வார்த்தையில் ஓரிரு வாரங்களில் இதற்கான சுமூக தீர்வுகளை கண்டிப்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டங்கள் மதியம் 2:30க்கு கைவிடப்பட்டது.