சிக்கன் பக்கோடா சாப்பிட்ட 2 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

சிக்கன் பக்கோடாவை ருசித்து சாப்பிட்ட குழந்தைகள் 2 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் திருவள்ளூர் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது.
திருவாலங்காடு அடுத்த தொழுதாவூர் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரது மனைவி கனகவள்ளி. இந்த தம்பதிக்கு நித்திஷ் (11), ஜீவன் (7) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் வெங்கடேசன் நேற்று மாலை பணிமுடிந்து வீட்டுக்கு வரும்போது சின்னம்மாபேட்டை பகுதியில் உள்ள சிக்கன் பக்கோடா சென்டரில் கோழிக்கால் பக்கோடாவை வாங்கி வீட்டிற்கு வந்து குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். இதை ருசித்து சாப்பிட்ட சிறுவர்கள் 2 பேரும் திடீரென சிறிதுநேரத்திலேயே வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர். இதனால் பதறிப்போன வெங்கடேசன் மகன்களை தூக்கிக் கொண்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பரிசோதித்ததில் அவர்கள் சாப்பிட்ட கோழி கால்களை சாப்பிட்டதால் உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சமீப காலமாக துரித உணவகங்களில் தயாரிக்கப்படும் தரமற்ற உணவுகளின் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக கேரளாவில் ஷவர்மாவை சாப்பிட்டு உயிரைவிட்ட பிளஸ்2 மாணவியை பற்றி சொல்லலாம். இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையினர் தீவிர பரிசோதனை மேற்கொண்டு சுகாதாரமற்ற மற்றும் கெட்டுப்போன உணவுப் பொருட்களை பயன்படுத்தும் உணவகங்களின் மீது நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.