BREAKING NEWS

சின்னாளபட்டியில் துணிகரம் ஓய்வுபெற்ற மருத்துவ அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை.

சின்னாளபட்டியில் துணிகரம் ஓய்வுபெற்ற மருத்துவ அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ராஜகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை(62). இவர் ஸ்டார்ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவருக்கு கோமதி என்ற மனைவியும், நவகீர்த்தி, கோபி, கிருஷ்ணன் ஆகிய 3 மகன்களும், லீலாவதி என்ற மகளும் உள்ளனர். 2 மகன்கள் பெங்களூரில் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மற்றொரு மகன் கத்தாரில் வசிக்கிறார்.

 

மகளுக்கும் திருமணமாகி சின்னாளபட்டியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். செல்லத்துரை கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மகன்கள் மற்றும் பேரன்பேத்திகளுடன் சுற்றுலா செல்ல விரும்பினார். அதன்படி அவர்கள் அனைவரும் கொச்சிக்கு சுற்றுலா சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்தனர். 3 அறைகளில் இருந்த பீரோக்களை உடைத்து அதிலிருந்த 40 பவுன் நகை, லேப்டாப் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அள்ளிச்சென்றனர்.

 

இன்றுகாலை அவர்களது வீடு திறந்துகிடந்ததை பார்த்து அக்கம்பக்கத்தினர் சின்னாளபட்டி போலீஸ்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் செல்லத்துரைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் தலைமையில் ஏ.எஸ்.பி கபிலன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சோதனை நடத்தினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

 

மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து வீட்டிலிருந்த முக்கிய தடயங்களை பதிவு செய்தனர். கொச்சியில் இருந்து செல்லத்துரை மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று மாலை வீடு திரும்புகின்றனர். அவர்கள் வந்த பிறகுதான் கொள்ளைபோன பணம் மற்றும் பொருட்களின் முழுவிபரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )