சிவகாசி பேருந்து நிலையம் முன்பு, முன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுக கட்சியினர் சாலை மறியல்.
சென்னையில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சிவகாசி பேருந்து நிலையம் முன்பாக,
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில், அதிமுக கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் உட்பட அதிமுக கட்சியினரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, திமுக அரசு ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்கட்சியை நசுக்கி விடலாம் என்று நினைப்பது ஒரு காலமும் நடக்காது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு அடுத்தபடியாக எடப்பாடியார் அதிமுக கட்சியின் 3வது அத்தியாயம்.
அதிமுகவினரை அச்சுறுத்தும் விதமாக திட்டமிட்டு, முன்னாள் முதல்வர் எடப்பாடியார் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
எடப்பாடியார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ராஜேந்திரபாலாஜி கூறினார்.