சென்னையில் பரபரப்பு திடீரென போராட்டத்தில் இறங்கிய 200 இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு.

இன்று அதிகாலை முதல் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை தலைமைச் செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இத்திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகள் வரையில் மட்டும் ராணுவத்தில் இளைஞர்கள் பணிபுரிய முடியும். அதைத்தொடர்ந்து அவர்களில் 25 சதவீதம் பேரால் மட்டுமே ராணுவத்தில் நீடிக்க முடியும் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
பெரும் விவாதத்தில் இருக்கும் இந்த புதிய திட்டத்தால் ராணுவத்தில் சேர விண்ணப்பித்த இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி, அதுவே பின்னர் கலவரத்திற்கு காரணமாகிவிட்டது.
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு முதல்முதலில் பீகாரில் போராட்டம் தொடங்கப்பட்டு தற்போது 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இளைஞர்கள் பல்வேறு இடங்களில் ரெயில்களுக்கு தீ வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வடமாநிலங்களில் தொடங்கிய போராட்டம் தற்போது தென்மாநிலங்களுக்கும் பரவியுள்ளது வேதனையளிக்கிறது.
அக்னிபாத் திட்டம் குறித்து பேச்சு எழுந்த வந்தநிலையில் தமிழகத்தில் நேற்று வரை எந்த போராட்டமும் நடைபெறவில்லை. இந்நிலையில், இன்று காலை சென்னை தலைமைச் செயலகம் அருகே கூடிய இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணுவத்தில் சேருவதற்கு விண்ணப்பித்திருந்த சென்னை, ஆரணி, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போர் நினைவுச் சின்னம் அருகே இன்று அதிகாலை திடீர் போராட்டத்தில் குதித்தனர். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா காரணமாக ராணுவத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறாமல் உள்ள நிலையில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அக்னிபாத் திட்டத்தால் தங்கள் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது என்று இளைஞர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
திடீர் போராட்டம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், அவர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்ததால், இளைஞர்களைக் கலைக்கும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் இருந்து மேலும் பல இளைஞர்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போர் நினைவுச் சின்னம் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.