தஞ்சாவூரில் புத்தகத் திருவிழாவில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதால், விற்பனையில் புதிய உச்சத்தைத் தொடுகிறது.

தஞ்சாவூர் அரண்மனை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பபாசி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்தி வரும் புத்தக திருவிழா ஜூலை 15 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஜூலை 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இத்திருவிழாவில் பதிப்பகத்தினர், நூல் விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் 110 அரங்குகளை அமைத்துள்ளனர். இதில், ஏறத்தாழ 90 அரங்குகளில் கல்கி எழுதிய புகழ்பெற்ற புதினமான பொன்னியின் செல்வன் இடம்பெற்றுள்ளது.
1,000 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சோழப் பேரரசின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த நாவல் காகிதத்தின் தரத்தைப் பொருத்து குறைந்தபட்சம் ரூ. 400 முதல் ரூ. 3,400 வரையிலான விலையில் விற்கப்படுகிறது. ஆயில் பேப்பரில் வண்ணப் படங்களுடன் கூடிய பொன்னியின் செல்வன் நாவல் ரூ. 3,200, 3,400 என்ற விலையில் விற்பனையாகிறது. பபாசி உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் புத்தகத் திருவிழாவில் பொன்னியின் செல்வன் நாவல் ஓரளவுக்கு விற்பனையாவது வழக்கம்தான். ஆனால், வரலாற்று மற்றும் சமூக நாவல்களை வாசிக்கும் பழக்கமுடைய வாசகர்களே அதிகமாக வாங்கிச் செல்வர். தற்போது, தஞ்சாவூரில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் அனைத்து தரப்பு வாசகர்களும் வாங்குவது மட்டுமல்லாமல், மாணவர்களும் விரும்பிக் கேட்டு வாங்கிச் செல்கின்றனர்.

இதனால், ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் நாவல் நாள்தோறும் குறைந்தது 100 தொகுப்புகள் விற்பனையாகின்றன. சில நாள்களில் 200 தொகுப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, இதுவரை 3000 தொகுப்புகள் வரை விற்பனையாகி உள்ளதாகவும் இன்னும் இரண்டு நாட்களில் மேலும் கூடுதலாக பொன்னியின் செல்வன் நாவல் விற்பனையாக வாய்ப்புள்ளது என் கூறும் பபாசி செயலர் எஸ்.கே. முருகன்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தயாரான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இந்த டீசர் சமூக வலைதளங்களில் பரவலாக பரவியதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களிடமும் பொன்னியின் செல்வன் நாவல் குறித்த தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தப் புத்தகத் திருவிழாவில் பொன்னியின் செல்வன் நாவல் விற்பனையில் புதிய உச்சத்தைத் தொடுகிறது எனவும் தெரிவித்தார்.

இதேபோல, சாண்டில்யன், கோவி. மணிசேகரன் உள்ளிட்டோரின் வரலாற்று நாவல்களும் வழக்கத்தை விட அதிகமாக விற்பனையாகின்றன.
தமிழ்நாடு அரசுப் பாடநூல் நிறுவன அரங்கிலும் தமிழக வரலாறு மக்களும், பண்பாடும், சோழர் வரலாறு, பாண்டியர் வரலாறு, நீலகண்ட சாஸ்திரி எழுதிய தென்னிந்திய வரலாறு, தமிழ்நாடு வரலாறு சங்க காலத்தில் வாழ்வியல், அரசியல், தொல் பழங்காலம் உள்ளிட்ட வரலாற்று நூல்களும் அதிக அளவில் விற்பனையாகின்றன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏறத்தாழ ரூ. 10,000 அளவுக்கு விற்பனையாவதாக அரங்கு விற்பனையாளர்கள் தெரிவித்தனர். அரசு வேலைவாய்ப்புக்காகப் போட்டித் தேர்வு எழுதுபவர்கள் அதற்கான புத்தகங்களையும் இன்னும் பல தரப்பு மக்களும் ஏராளமான புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
