தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் காமராஜின் உறவினர் வீடு, மருத்துவமனையில் சோதனை.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் உறவினர் வீடு, மருத்துவமனை ஆகிய இரு இடங்களில் நேற்று காலை முதல் மதியம் வரை தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சோதனை நடத்தினர். தஞ்சாவூர் பூக்கார வஸ்தா தெருவில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் சம்மந்தி, மருத்துவர் மோகன் என்பவரது வீடு உள்ளது. இந்த வீட்டில் நேற்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

அதே போல் தஞ்சாவூர் எலிசா நகரில் காமராஜின் மகன்களால் கட்டப்பட்டு, இன்னும் திறக்கப்படாமல் உள்ள ஸ்ரீகாமாட்சி மருத்துவமனையிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் காலை முதல் மதியம் வரை சோதனை நடத்தினர். இந்த இரண்டு சோதனைகளுக்கும் தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி ராஜ் தலைமையில் இரு இடங்களிலும் தலா 9 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் என்னென்ன ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்து போலீஸார் ஏதும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில் நேற்று மதியம் பூக்காரத்தெருவில் மருத்துவர் மோகன் வீட்டின் அருகே திருவையாறு முன்னாள் எம்எல்ஏ எம்.ரெத்தினசாமி, அதிமுக நிர்வாகிகள் கு.ராஜமாணிக்கம், துரை.திருஞானம், கோபால், புண்ணியமூர்த்தி, சரவணன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டு, லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
=
