தஞ்சாவூரில் விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து தொடங்க நடவடிக்கை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தகவல்.
தஞ்சாவூர்,
தஞ்சாவூரில் விமானப்படைத் தளத்தில் நிலப்பரிவர்த்தனை நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதால், விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து துவங்க வாய்ப்புள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாநகரில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில், பொதுமக்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக நேற்று மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, பகுதி செயலாளர் நீலகண்டன், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்தி ஆகியோரிடம் பாராளுமன்ற உறுப்பினர் கலந்தாலோசித்தார்.
அப்போது தஞ்சாவூர் பெரிய கோயில் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், திலகர் திடல் பகுதி, பழைய பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக கலந்தாலோசிக்கப் பட்டது.
பின்னர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ராவை வரவழைத்து, தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் நிலப்பரிவர்த்தனை தொடர்பாக பணி முன்னேற்றங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் கேட்டறிந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் கூறியதாவது: தஞ்சாவூரில் இரண்டாம் உலகப்போரின் போது விமான போக்குவரத்து தளம் உருவாக்கப்பட்டது.
இங்கிருந்து முன்பு பயணிகள் விமானப் போக்குவரத்து வசதிகள் நடைபெற்றது. காலப்போக்கில் பயணிகள் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு தஞ்சாவூரில் விமானப்படை உருவாக்கப்பட்டது. ஏற்கெனவே விமான போக்குவரத்துக்கு உள்ள 38 ஏக்கர் நிலம் அங்குள்ளது. அதன்பிறகு விமானப்படைக்கு கூடுதலாக நிலம் கையகப்படுத்தப்பட்டது.
தற்போது தஞ்சாவூருக்கு உலகளவில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவதாலும், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அதிகமானோர் சென்று, வருவதால் தஞ்சாவூரில் விமான போக்குவரத்து வசதி அவசியமாகிறது.
விமானப் போக்குவரத்து துறைக்கு உள்ள 38 ஏக்கர் நிலம், விமானப்படைத் தளத்தின் உள்பகுதியில் உள்ளது.
எனவே உள்பகுதியில் உள்ள அந்த நிலத்தை விமானப்படைக்கு கொடுத்துவிட்டு, அதற்கு பதிலான புதுக்கோட்டை சாலையோரம் உள்ள இடத்தை விமானப் போக்குவரத்துக்கு வழங்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலத்தை வருவாய்த்துறையின் சார்பில் பரிவர்த்தனை செய்து தர கோரப்பட்டுள்ளது.
புதுடெல்லில் ஓரிரு நாட்களில் விமான போக்குவரத்து தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது. அதில் நான் பங்கேற்கவுள்ளேன்.
தஞ்சாவூரில் விமானப்படை தளத்தில் உள்ள நிலப்பரிவர்த்தனை தொடர்பான நடைமுறைகள் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும்.
இதையடுத்து அடுத்த ஓராண்டு காலத்துக்குள் தஞ்சாவூரில் பயணிகள் விமானப் போக்குவரத்து தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறும் என்றார்.