தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, மலையப்பநல்லூரை சேர்ந்தவர் இளங்கோவன். இயற்கை விவசாயி.

வயலில் திருவள்ளுவர் உருவத்தில் நடவு:
இந்நிலையில் இயற்கை விவசாயத்தை போற்றும் வகையில், உழவுக்கென்று தனி அதிகாரம் கொடுத்து உலக மக்களுக்கு உழவு தொழிலின் சிறப்பை உணர்த்திய திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில், அவரது உருவத்தை கொண்டு நடவு செய்துள்ளார் விவசாயி இளங்கோவன்.
நேபால் மாநிலத்தில் உள்ள சின்னார் என்ற நெல் ரகத்தினாலும், மைசூர் மல்லி என்ற நெல் ரகத்தினாலும், 50 அடி நீளமும், 45 அடி அகலமும் கொண்ட திருவள்ளுவரின் உருவ அமைப்பில் விளைநிலத்தால் நடவு செய்துள்ளார். இதனை கழுகு பார்வையில் பார்க்கு–ம்போது திருவள்ளுவர் அமர்ந்திருக்கும் நிலையி–லான முழு உருவத்தை காட்டுகிறது என்பது சிறப்பம்சம்.
வயலில் திருவள்ளுவர் உருவத்தை உருவாக்கிய விவசாயிக்கு அரசு தலைமை கொறடா கோவி செழியன் சால்வை அறிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து இயற்கை விவசாயி இளங்கோவன் கூறுகையில், நான் இயற்கை விவசாயத்தை கடந்த 10 வருடங்களாக செய்து வருகிறேன். ஒவ்வொரு வருடமும் வித்தியாசமாக தொடர்ந்து செய்து வந்தேன்.
அதுபோல இந்த வருடம் 2000 வருடங்களுக்கு முன்பு திருவள்ளுவர், அவர் இயற்றிய மொத்த குறள்களில் 11 குறள்கள் இயற்கை விவசாயம் பற்றி எழுதி உள்ளார். அதன் தாக்கமாக அதே இயற்கை விவசாயத்தை நாங்களும் செய்கிறோம் என்ற சந்தோஷத்தில், திருவள்ளுவரின் உருவத்தை வயலில் நடவு செய்ய கடந்த வருடம் முதல் நினைத்து வந்தேன்.
அதனை தொடர்ந்து இதனை கடந்த 5 நாட்களாக நான் தனி ஆளாக நின்று நட்டுள்ளேன். இதனைத் தொடர்ந்து எனது அடுத்த முயற்சியாக நம்மாழ்வார் நெல் ஜெயராமன் போன்ற முன்னோடி விவசாயிகளின் உருவ அமைப்பை வயலில் நட உள்ளேன் என்று தெரிவித்தார்.