தஞ்சை அருகே பார்வையற்ற இளம்பெண்ணை வற்புறுத்தி முறைகேடாக நடந்து அவரது கர்ப்பத்தை கலைத்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சையை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு ஏழு வயதாக இருக்கும் போது ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பால் கண்பார்வை பறிபோனது.
இந்நிலையில் அந்த பார்வையற்ற இளம்பெண்ணிடம் தஞ்சை அருகே துருசுப்பட்டி மேல தெருவை சேர்ந்த விவசாயி வீரையன் (45) என்பவர் நெருங்கி பழகி வந்துள்ளார். அந்த இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதாகவும் தெரிகிறது.
தொடர்ந்து பலமுறை அப்பெண்ணை வற்புறுத்தி தகாத முறைகேடாக நடந்து வந்துள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இதுகுறித்து அறிந்த வீரையன் அப்பெண்ணுக்கு மாத்திரை வாங்கி கொடுத்து கர்ப்பத்தை கலைத்துள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட அப்பெண் இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதையறிந்த வீரையன் தலைமறைவானார். இதற்கிடையில் இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் செங்கிகப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக இருந்த வீரையனை தேடி வந்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உறவினர் ஒருவர் வீட்டில் மறைந்திருந்த வீரையனை செங்கிப்பட்டி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து வீரையனை நேற்றிரவு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி தஞ்சை கிளை சிறையில் அடைத்தனர்.