தஞ்சை மாநகராட்சியால் முழுமையாக மீட்கப்பட்ட யூனியன் கிளப் கட்டிடத்தில் நூலகம்- ஆரம்ப சுகாதார நிலையம் அமைய உள்ளது. மேயர் சண். ராமநாதன் பேச்சு.
தஞ்சாவூர்,
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தலைமை தாங்கினார். ஆணையர் சரவணகுமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மேயர் சண் ராமநாதன் பேசியதாவது :-
தஞ்சாவூர் மாநகராட்சியால் முழுமையாக மீட்கப்பட்ட 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டதும் பல கோடி மதிப்பிலான யூனியன் கிளப் கட்டிடத்தில் நூலகம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் வர உள்ளது. மாமன்னர் ராஜ ராஜ சோழன் சதய விழாவை அரசு விழாவாக அறிவித்த முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இந்த மாமன்றம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு:-
மண்டல குழு தலைவர் புண்ணியமூர்த்தி: தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் புதிய பஸ் நிலையத்திலேயே நிரம்பி வழிகிறது. இதனால் பழைய பஸ் நிலையத்திலிருந்து ஏறும் பயணிகள் இடம் கிடைக்க முடியாமல் அவதி அடைகின்றனர்.
இதனால் பலர் புதிய பஸ் நிலையத்துக்கு சென்று கும்பகோணம் பஸ்ஸில் ஏறும் சூழல் உள்ளது. எனவே புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுவது போல் பழைய பஸ் நிலையத்தில் ஆரம்ப மையமாகக் கொண்டு கும்பகோணத்திற்கு பஸ்கள் இயக்க வேண்டும். இதேபோல் திருச்சிக்கும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும்.
மண்டல குழு தலைவர் மேத்தா: சதய விழாவை அரசு உளவாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் காமராஜ் மார்க்கெட்டை திறந்து வைத்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மணிகண்டன் : ரூ.500-க்கு கீழ் வருமானம் உள்ள அம்மா உணவகம் மூடப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏழைகளுக்கு பயன்படும் அம்மா உணவகத்தை மூடக்கூடாது . தஞ்சை மாநகரில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். தஞ்சை மாநகரில் உள்ள சாந்திவனம், ராஜகோரி , மாரி குளம் ஆகிய மூன்று சுடுகாட்டில் உடல்களை எரிக்க தனியார் அமைப்புக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்.
இதற்கு பதில் அளித்து மேயர் சண். ராமநாதன் கூறும்போது, சுடுகாட்டில் உடல்களை இலவசமாக தகனம் செய்யப்படும் என்று நான் பதிவி ஏற்றவுடன் திட்டம் கொண்டு வந்து செயல்படுத்தினேன்.
கடந்த முறை உடல் தகனம் செய்ய பணம் வாங்கப்பட்டது. ஆனால் நான் மேயராக பதவி ஏற்றவுடன் முழுக்க முழுக்க இலவசமாக உடல் தகனம் செய்யப்படும் என்று அறிவித்தேன். இந்தத் திட்டத்தில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை. ஒருபோதும் முறைகேடு நடக்க விட மாட்டேன். ஒரு சுடுகாட்டுக்கு உடல்களை எரியூட்ட 27 டன் அளவுக்கு மரக்கட்டைகள், ரூ.12 ஆயிரம் வைக்கோல்கள் தேவைப்படுகிறது. மேலும் 2 உடலுக்கு 1 சிலிண்டர் எரியூட்ட தேவைப்படுகிறது.
இவற்றையெல்லாம் அறியாமல் கவுன்சிலர் எந்த விதத்தில் பேசுகிறார் என தெரியவில்லை. இருந்தாலும் முழுக்க முழுக்க உடல்கள் இலவசமாக மட்டும்தான் தகனம் செய்யப்பட்டு வருகிறது என்பதை உறுதிப்பட கூறுகிறேன். ஒருபோதும் முறேகேடு நடக்காது. மேலும் அம்மா உணவகம் மூடப்படாது என்றார்.
தொடர்ந்து கவுன்சிலர் கோபால் பேசும் போது : 4 ராஜ வீதிகளிலும் சாலைகளை சீரமைக்க வேண்டும். கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதை தடுக்க வேண்டும். தெற்கு வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனை சீரமைத்து போக்குவரத்து ஒழுங்குபடுத்த வேண்டும் என்றார்.
யு.என்.கேசவன்: 30-வது வாடி சௌராஷ்ட்ரா கீழ ராஜ வீதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. அதை தடுத்து அங்கு வேலி கட்ட வேண்டும். கூடுதல் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.
ஜெய் சதீஷ்: எனது வார்டில் ரூ.49 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
தமிழ்வாணன் : மாநகரில் பல இடங்களில் போக்குவரத்து சிக்னல் கிடையாது. அனைத்து இடங்களிலும் போக்குவரத்து சிக்னலை வைத்து ஒழுங்குபடுத்த வேண்டும். அனைத்து: சாலைகளையும் சுத்தப்படுத்த வேண்டும்.
காந்திமதி : தற்காலிக மீன் மார்க்கெட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அருகே உள்ள ரேஷன் கடை பகுதிக்கு வருகிறது. இதனால் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் மக்கள் அவதி அடைந்துள்ளனர். இதை தடுக்க வேண்டும். மேலும் மார்க்கெட் மற்றும் உள்ள வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதிகளில் சாலைகளை சீரமைக்க வேண்டும்.
சரவணன் : சீனிவாசபுரம் அகழிபாலத்தில் மாடுகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக மாலை இரவு நேரங்களில் மாடுகள் அங்கேயே படுத்துக் கொள்கிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாடுகளை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீலகண்டன் : பொது இடங்களில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும்.
ஸ்டெல்லா : கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி பகுதிக்கு நேரில் சென்று நிவாரண உதவி வழங்கிய முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல் மற்ற கவுன்சிலர்களும் தங்களது வார்டு சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை குறித்து பேசினர்.
இதற்கு மேயர் சண் ராமநாதன், கவுன்சிலர்கள் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.